Main Menu

இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக் கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், கருத்துக்கணிப்பில் முன்னாள் இராணுவத் தலைவரே முன்னிலை வகிக்கின்றார்.

அந்தவகையில், முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸின் மையவாத நீல மற்றும் வெள்ளை கூட்டணி 32 முதல் 34 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லுகுட் கட்சி 30 முதல் 33 இடங்களே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று மீண்டும் இஸ்ரேலின் பிரதமரானார் பெஞ்சமின் நெதன்யாகு. மொத்தமுள்ள 120 இடங்களில், 65 இடங்களில் லுகுட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்று ஆட்சியைப் பிடித்தன.

எனினும் தொடர்ந்து கட்சிகளை இழுத்து கூட்டணி அமைக்க முடியாததால் அரசினை அமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து செப்ரெம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணிலேயே நேற்று தேர்தல் இடம்பெற்றது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த நெதன்யாகு, “உண்மையான முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், ஆனால் ஒன்று தெளிவாக உள்ளது. இஸ்ரேல் நிலை வரலாற்று கட்டத்தில் உள்ளது, நாங்கள் பெரும் வாய்ப்புகளையும் பெரும் சவால்களையும் எதிர்கொண்டோம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “நிச்சயமாக நாங்கள் உண்மையான முடிவுகளுக்காக காத்திருப்போம், ஆனால் நாங்கள் எங்கள் பணியை நிறைவேற்றியுள்ளோம்” என மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...