Main Menu

இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!

ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார்.

இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளரான மோஹன் டி சில்வா உறுதி செய்துள்ளார்.

மேலும், தன்னை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்பட்டிருப்பதாகவும் சந்திக ஹதுருசிங்க கூறியியுள்ளார்.

எனினும், இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபை எந்தவிதமான உறுதியான பதிலும் வழங்கவில்லை என கூறப்படுகின்றது.

குமார் சங்கக்காரா, மஹேல ஜெயவர்த்தனவின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணி, மிக மோசமாக பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹத்துருசிங்க மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.

ஆனாலும், அவரது பயிற்சியின் கீழும் இலங்கை அணி மோசமாக பெறுபேறுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததுடன், கடந்த வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றியை மட்டும் பதிவு செய்தது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரில் கூட, இலங்கையணி சோபிக்கத் தவறி இருந்ததுடன், லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது. இதனை அடுத்து ஹத்துருசிங்க உள்ளிட்ட அனைத்துப் பயிற்சியாளர்களையும் மாற்றும் முடிவை இலங்கை கிரிக்கெட் சபை எடுத்திருந்தது.

குறிப்பாக சந்திக ஹதுருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாரளராக காணப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஹரின் பெர்னாந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக மோசமான முடிவுகளை காட்டிய சந்திக ஹதுருசிங்கவிற்கு அதிக சம்பளத் தொகை கொடுக்கப்படுவதாக விமர்சித்திருந்ததோடு, அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் அரைவாசி பணத்திற்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பயிற்சியாளரை இலங்கை கிரிக்கெட் அணி தருவித்திருக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்ட சந்திக ஹதுருசிங்க, பதவியிலிருந்து விலகினார்.
ஹதுருசிங்கவிற்கு 16 மாதங்கள் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட முடியும் என்ற நிலையில், அவர் தனது பதவியினை துறந்தார்.

இதன்பிறகு, சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு அணியின் வேகப்பந்து பயிற்சியாராக இருந்த ருமேஷ் ரத்னாயக்க இடைக்கால பயற்சியாளராக, நியமிக்கப்பட்டார்.

இவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆறுதல் வெற்றி கண்டிருந்தாலும், வெளிநாட்டு பயிற்சியாளரொருவரை நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபை கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தது.

இதற்கமைய தற்போது, இரண்டு ஆண்டுகள் ஓப்பந்தகால அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தரை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.

பகிரவும்...