Main Menu

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் – இரா.துரைரத்தினம்

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் சிறிலங்கா படைகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும் நடக்கவில்லை, தமிழர்கள் அகிம்சை வழியில் தமக்கான உரிமைகளை கோரி நின்ற போது அதற்கு பதிலாக  சிங்கள பேரினவாத அரசுக்கள் அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து வந்திருக்கின்றன.
தமிழ் போராட்ட குழுக்கள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதால் அதற்கு பதிலாகவே தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள் என கூறுபவர்களும் உண்டு. ஆனால் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே சிங்கள பேரினவாத அரசுகள் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை ஆரம்பித்து விட்டன.
இலங்கையின் வரலாற்றில் தமிழர்கள் மீதான முதலாவது இனப்படுகொலை அம்பாறை இங்கினியாகலயில் 1956ஆம் ஆண்டு யூன் 05ஆம் திகதி இடம்பெற்றது.
தற்போது தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கும் அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்டதாக இருந்தது. 1940களின் பின்னர் அம்பாறையை அண்டிய பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டன. கல்லோயா அபிவிருத்தி திட்டம், கந்தளாய் குடியேற்றத்திட்டம், அல்லைக்குடியேற்ற திட்டங்களின் மூலம் கிழக்கு மாகாணத்தில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.
1956ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா பிரதமரானார். 1956ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி சிங்களம் மட்டும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதை எதிர்த்து இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர்கள் கொழும்பு காலி முகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினர். இவர்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் தமிழ் தலைவர்கள் பலரும் காயமடைந்தனர். கொழும்பில் தமிழ் தலைவர்கள் தாக்குதல் நடத்திய சிங்கள காடையர்கள் அம்பாறை இங்கினியாகல பகுதியில் இருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள காடையர்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். ஏற்கனவே அங்கு குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு  பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தது
இங்கினியாகல என்ற இடத்தில் இருந்த கரும்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த தமிழ் தொழிலாளர்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் நடத்தினர்.
பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அரைகுறை உயிருடன் இருந்தவர்களையும் இறந்தவர்களின் சடலங்களையும் தீயில் தூக்கி வீசினார்கள். இதில் 157 தமிழ் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலில் பெருந்தொகையாக படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்.
1956ல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கா தமி;ழரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தார். இதனை எதிர்த்து கண்டிக்கு பாதயாத்திரை சென்றார். இதனை தொடர்ந்து தென்னிலங்கையில் இனவாதம் பரப்பபட்டது
1958ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து தொடரூந்தில் சென்ற தமி;ழரசுகட்சி தொண்டர்கள் பொலனறுவையில் வைத்து தாக்கப்பட்டனர். இதே காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு சென்ற நுவரெலியா மேயர் செனிவரட்ணா கொல்லப்பட்டார். இதனை பெரிது படுத்தி அப்போது இருந்த பிரதமர் பண்டாரநாயக்கா அரச ஊடகங்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் தமிழர்கள் மீது சிங்களவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டார்கள். பல தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாணந்துறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலய குருக்கள் ஆலயத்திற்குள் வைத்து எரிக்கப்பட்டார்.
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை தடுக்காத பிரதமர் பண்டாரநாயக்கா தமிழர்கள் பட்டு அனுபவிக்கட்டும் என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த இனப்படுகொலையின் போது தமிழர்களின் வீடுகள் தீவைத்து கொழுத்தப்பட்டன. பல தமிழ் குழந்தைகள் கொதிக்கும் தாரில் போடப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் 300க்கு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். காலங்காலமாக கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வசித்து வந்த தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு திரும்பினர்.
இதன் பின்னர் இலங்கையில் நடந்த மூன்றாவது இனப்படுகொலையாக 1974ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி நான்காவது உலக தமிழாராட்சி மாநாட்டில் நடந்த படுகொலை கருதப்படுகிறது.
1974ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் திகதி முதல் பத்தாம் திகதிவரை தமிழ் மக்கள் தமது மொழி பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்காவது உலகத்தமிழராட்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்தனர்.
உலக தமிழராட்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அதும் தமிழ் மக்கள் எழுச்சியுடன் நடத்துவதை அப்போது ஆட்சியிலிருந்து சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்தில் மகாநாடு நடத்துவதை தடுக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டதுத
மாநாடு நடைபெறுவதற்கான அரங்குகளின் அனுமதியை வழங்க அரசாங்கம் மறுத்தது
மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்க மறுத்தது
எனினும் மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் எழுச்சியுடன் செயற்பட்டதை கண்ட அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கியது.
யாழ். குடாநாடு எங்கும் அலங்கரிக்கப்பட்டு யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டிருந்ததுத
ஜனவரி 10ஆம் திகதி நிறைவு நாளாக கொண்டாடப்பட்டதுத இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழன பெருமையையும் பண்பாட்டைப்பற்றியும் பேசினார்கள்.
அப்போது மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் சந்திரசேகர தலைமையிலான சிறிலங்கா காவல்துறையினர் மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர்.
இந்த சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராசன் ( 15வயது) மாணவன், பரம்சோதி சரவணபவன் ( 26வயது ) வைத்தியநாதன் யோகநாதன் ( 32வயது ) ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் ஆசிரியர் 52வயது, புலேந்திரன் அருளப்பு 53வயது, இராசதுரை சிவானந்தன் மாணவன் 21வயது, இராசன் தேவரட்ணம் 26வயது. சின்னத்துரை பொன்னுத்துரை 56வயது, சின்னத்தம்பி நந்தகுமார் 14வயது, ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
கண்ணீர் புகைக்குண்டை வீசிய பொலிஸார் மக்கள் சிதறி ஓடிய போது மின்சார வயர்களையும் அறுத்து விழுத்தினர். இதில் சிக்கியும் சிலர் கொல்லப்பட்டனர்.
இம்மக்களை படுகொலை செய்த உதவி காவல்துறை அத்தியட்சகர் சந்திரசேகரவுக்கு சிறிமாவோ பண்டாரநாயக்கா காவல்துறை அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கினார்.
இப்படுகொலையே தமிழ் இளைஞர்கள் சிங்கள படையினருக்கு எதிராக ஆயுதம் எடுத்து போராட தூண்டியது எனலாம்.
இதன் பின்னர் இலங்கையில் 165க்கு மேற்பட்ட கூட்டுப்படுகொலைகளை சிங்கள இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களும் செய்தன.
குமுளமுனை படுகொலை, குமுதினி படகு படுகொலை, உடும்பன்குள படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, திராய்கேணி படுகொலை, வீரமுனை பிள்ளையார் ஆலய படுகொலை, நாகர்கோவில் பாடசாலை படுகொலை, குமரபுரம் படுகொலை, மைலந்தனை படுகொலை, மடுத்தேவாலயப்படுகொலை, உட்பட 165க்கு மேற்பட்ட கூட்டுப்படுகொலைகள் நடந்திருக்கின்றன. இவற்றில் சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மாலை வேளையில் 185 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மிகப்பெரிய கூட்டு படுகொலையாக கருதப்படுகிறது.
சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவத்தில் ஒருவயது கூட நிரம்பாத 5குழந்தைகள் 10வயதிற்கு உட்பட 42 சிறுவர்கள், 85 பெண்கள், 60வயதுக்கு மேற்பட்ட 28 வயோதிபர்கள் என மொத்தமாக 185 பொதுமக்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டு தீயில் போட்டு எரித்தனர். பிரியா என்ற மூன்று மாத குழந்தையை தாயின் கையிலிருந்து பறித்தெடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி தீயில் எறிந்தனர்.
சத்துருக்கொண்டான், கிழக்கு பல்கலைக்கழக படுகொலை உட்பட 1990களின் பின்னர் கிழக்கில் நடந்த படுகொலைகளை இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் புளொட் போன்ற தமிழ் ஒட்டுக்குழுக்களும் ஜிகாத் போன்ற முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் சேர்ந்தே செய்தனர்.
பொது எதிரியான சிங்கள படைகள் தமிழ் மக்களை படுகொலை செய்ததை மிஞ்சும் அளவுக்கு தமிழ் மக்களை காப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்ட தமிழ் ஆயுதக்குழுகள் அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்திருக்கின்றன.
நாசி வதை முகாம்களில் நடந்த கொடுமைகளை விட கடந்த 50ஆண்டுகளில் இலங்கையில் சிங்கள பேரினவாத அரசுகளால் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாசிப்படுகொலைகளை கண்டு இத்தகைய படுகொலைகள் இனிஒருபோதும் வேண்டாம் என்று உணர்ந்து கொண்ட மேற்குலகம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் பெரும் கவலை.
– இரா.துரைரத்தினம்
( ரி.ஆர்.ரி தமிழ் ஒலிக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டதாகும்)
பகிரவும்...