Main Menu

இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் பதவி ஏற்றார்

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து அங்கு முதலமைச்சராக பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவியும் மாநில காங்கிரஸ் தலைவருமான பிரஷிபாசிங், கட்சியின் மூத்த தலைவர்கள் சுக் விந்தர் சிங், முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் முதல்வராக பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுக்க ஒப்புதல் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை சிம்லாவில் மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் பூபேஷ் பாகல் நிருபர்களிடம் கூறுகையில், “இமாச்சல பிரதேச புதிய முதல்வராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுக்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளது” என்று தெரிவித்தார். இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு இன்று பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக முகேஷ் அக்னி ஹோத்ரி பதவி ஏற்றார். முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சுக்விந்தர் சிங் பஸ் டிரைவரின் மகன் ஆவார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்த அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார். இமாச்சல பிரதேசம் நாதஷன் தொகுதியில் வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

பகிரவும்...