Main Menu

காத்தான்குடியில் ஆசிரியர் கடத்தல் பிரதான சந்தேக நபர் கைது !

மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அஜ்வத் ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 27 வயதுடைய குறித்த சந்தேக நபர் ஈரான் சிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாடகைக்குப் பெறப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 6ம்திகதி மாலை முதல் குறித்த ஆசிரியர் காணாமல் போன சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் வைத்து தினமும் 10ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்குப் பெறப்பட்ட வேனின் மூலம் குறித்த ஆசிரியரை மேற்படி சந்தேக நபரும் அவரது சகோதரரும் கடத்திச் சென்று காங்கேயனோடை ஈரான் சிட்டியிலுள்ள தனது வீட்டில் குறித்த நபர் மறைத்து வைத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய அவரது சகோதரர் அன்றைய தினமே டுபாய் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட அஜ்வத் ஆசிரியர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காத்ததான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பகிரவும்...