Main Menu

இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா

பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் வழக்குகளுக்குப் போகாது இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், பிரதமரால் தைப்பொங்கலை முன்னிட்டு நாட்டிலுள்ள 100 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அம்பாறை, காரைதீவு பகுதியில் உள்ள ஆறு ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “அன்றுதொட்டு தமிழர்களுக்கென அடையாளமாக உள்ள ஒரேயொரு சொத்து ஆலயமாகும். இந்த ஆலயங்கள் தேவையான ஆவணங்களுடன் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். இவைகள் இல்லாத காரணத்தினால் பல ஆலயங்கள் நீதிமன்றில் காலத்தைக் கடத்துகின்றன. முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். வழக்குகளுக்குப் போகக்கூடாது. இருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

ஆலயங்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து கல்விக்காக செலவிட வேண்டும். அறநெறி வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும்.

இதேவேளை, தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக் காணவில்லை என பலர் விரக்தியில் இருந்தனர். உண்மைதான், அரசாங்கம் இப்போதுதான் நிலையான கட்டத்திற்கு வந்துள்ளது. இனி நாம் நிறைய வேலைகளை முடிக்கலாம்.

இந்து சமயத்தில் மிகுந்த பக்தி பிரதமரிடம் உள்ளது. ஜனாதிபதியும் சாதகமாகவே உள்ளார். எனவே, நாம் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அத்துடன், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஷவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டார்.

பகிரவும்...