Main Menu

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை சந்திக்க முயற்சி ; நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி மகஜர் கையளிக்கவும் முடிவு

தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன.

அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் முதலாவது உரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகள், மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் காலங்கடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போதும், பின்னர் பாராளுமன்ற தேர்தலின்போதும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நீடிக்கின்றவற்றை கோடிட்டுக் காண்பித்து மகஜரொன்றையும் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த வரைவு எதிர்வரும் வாரமளவில் இறுதிசெய்யப்பட்டு அடுத்த பாராளுமன்ற காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்திப்பது இலக்காகவுள்ளது.

இதேநேரம், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் உள்ளீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ் பேசும் மக்களின் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக அந்த அணியில் போதுமான கவனம் செலுத்தப்படாமையை அடுத்தே தமிழ் பேசும் கட்சிகள் தம்மிடையே கூட்டொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதோடு இது தமிழ் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருக்கமே தவிரவும் தேர்தல் கூட்டொன்றாக இருக்காதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.