Main Menu

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாடகருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடந்த 02ஆம் திகதி பாடகர், கைது செய்யப்பட்டு 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் உயர் நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை நேற்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை கோரி மனு தாக்கலும் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில் இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது, தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120 இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், பிணையில் செல்வதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.