Main Menu

இந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் : லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவிப்பு!

பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் இந்திய சிறையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நிரவ்மோடியின் வழக்கறிஞர் கூறுகையில், “இந்தியாவில் நீதித்துறையின் நேர்மை கணிசமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அவருக்கு நேர்மையான விசாரணை கிடைக்காது. நிரவ் மோடி விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது.

அவர் நிரபராதி என்று யூகிக்கக்கூட மறுக்கிறார்கள். அவர் அங்கு வெறுக்கப்படும் நபராக பார்க்கப்படுகிறார். சி.பி.ஐ, அமுலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் தரமும் வீழ்ச்சி அடைந்திருப்பதை சாட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், லண்டன் சிறையில் நிரவ் மோடியின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால், அவருக்கு உளவியல் ஆலோசனை தரப்படுவதில்லை.

குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் அவர் வெறும் 25 நிமிடங்கள்தான் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்.

அவர் நாடு கடத்தப்பட்டு, இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டால், அங்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. மருத்துவ வசதி கிடைக்காமல், அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது.

அவர் மும்பை ஆர்தர் ரோடு  சிறையில் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார் என்ற இந்திய அரசின் வாக்குறுதியும், சிறை காணொளியும் போதுமானது அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...