Main Menu

இந்திய எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!

இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற மோதலில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வீரர் பழனியின் உடலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது.

அதன்பின்னர் வீட்டிற்கு அருகேயுள்ள சொந்த நிலத்தில் பழனியின் உடலுக்கு முப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் பழனியின் உடல் நேற்று டெல்லியில் இருந்து விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்குக் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து பழனியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பழனியின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு முப்படை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியல் வினய், பொலிஸ் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் அஞ்சலி செலுத்தியதோடு, பழனியின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூருக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை இறுதிச் சடங்கு இடம்பெற்றது.

பகிரவும்...