Main Menu

இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள்? – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி

ஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

ஐ.நா., பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, உரையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த கூட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) காணொலி வாயிலாக உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, கடந்த சில மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்று நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில், ஐ.நாவின் பங்கு என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை என்றும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் உலகில், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் பயன்படுத்தப்படும் என உலகளாவிய சமூகத்திற்கு உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், ஐ.நா., பாதுகாப்பு சபையில், தற்காலிக உறுப்பினராக, இந்தியா தன் கடமையை எப்போதும் சிறப்பாக செய்துவருகிறது என தெரிவித்துள்ள மோடி, மனித குலத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்க, தாம் ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் சுயநலம் கருதாமல், மனிதவள மேம்பாட்டிற்காக, இந்தியா பாடுபடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் அமைதியை நிலைநாட்ட, அதிக உயிர் தியாகம் செய்தது இந்தியாதான் என்றும் உலகளவிய கொள்கைக்கு, இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா., சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது என்றும் இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என தெரியவில்லை என்றும் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா., வில் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, உலகின் மிகப் பெரிய நாடான இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்? என இந்தியப் பிரதமர் நரேந்திர மொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே, இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள் என, பிரதமர் உரையாற்றியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...