Main Menu

ஆப்கானிஸ்தானில் இருந்து 329 இந்தியர்கள் இன்று ஒரே நாளில் மீட்பு

காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் அமெரிக்க படையுடன் இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு வந்தடைந்த காட்சி.காபூல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து தலிபான்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக கொண்டு வந்துவிட்டனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

முன்னதாக தலிபான்கள் முக்கிய தலைநகரங்களை பிடிக்க தொடங்கிய போதே வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், வெளிநாட்டினரை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டன. விமானங்களை அனுப்பி அவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்ததை அடுத்து அந்த நாட்டில் இருந்து மக்கள் வெளியேற முயற்சித்து வருகிறார்கள். இதற்காக காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

அதேபோல் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டினரும் தங்கள் நாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்துக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்கள் வெளிநாட்டினரை கணக்கெடுத்து விமானங்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. தலிபான்களின் ஆதிக்கம் தொடங்கிய போதே ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதையடுத்து பல இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார்கள்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக தெரியவந்தது.

அவர்களுக்காக விமானங்கள் காபூலுக்கு அனுப்பப்பட்டன. அதன்படி கடந்த 16-ந்தேதி இந்திய தூதர், தூதரக அதிகாரிகள் உள்பட 40 பேர் மீட்கப்பட்டனர். மறுநாள் சி-17 ரக இந்திய விமானப்படை விமானம் மூலம் 150 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். நேற்று 90 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாடு வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மூன்று விமானங்களில் மீட்கப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா விமானத்தில் 87 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் ஆக மொத்தம் 89 பேர் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் தஜிகிஸ்தான் வழியாக பயணித்து டெல்லிக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது.

மற்றொரு விமானமான ‘இன்டிகோ’வில் 135 இந்தியர்கள் கத்தார் தலைநகர் தோகா வழியாக அழைத்து வரப்பட்டனர். இந்த விமானமும் இன்று அதிகாலை டெல்லியில் தரை இறங்கியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டது. இதில் 24 ஆப்கன் சீக்கியர்கள், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரண்டு செனட்டர்களும் அடங்குவர். அந்த விமானம் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரை இறங்கியது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, ‘‘இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் மூலம் 87 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தான் வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கு தஜிகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவிகளை செய்தனர். மேலும் விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன’’ என்றார்.

மேலும் கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களில் காபூலில் இருந்து 135 இந்தியர்கள் தோகாவுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்கள் இந்திய மீட்பு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக கத்தார் நாட்டு அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

இன்று ஒரே நாளில் 329 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள எஞ்சிய இந்தியர்களையும் துரிதமாக மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் அமெரிக்க படையுடன் இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதில் இந்தியாவில் இருந்து தினமும் 2 விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து தினமும் விமானங்களை இந்தியா அனுப்பி வருகிறது. அங்கிருந்து மீட்கப்படும் இந்தியர்கள் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே மற்றும் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். மேலும் காபூலில் இருந்து நேரடியாக டெல்லிக்கும் விமானம் இயக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வருகிற 24-ந் தேதிக்கு பிறகு காபூல் விமான நிலையமும் தலிபான்கள் வசம் சென்றுவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகிற 31-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிடும். அதற்குள் எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடி இருக்கிறது.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் சோதனை சாவடிகளை கடந்துதான் காபூல் விமான நிலையத்துக்கு வர வேண்டும். இதனால் மற்ற பகுதிகளில் சிக்கி உள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையத்துக்கு வந்தடைவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

பகிரவும்...