Main Menu

ஆண்டுக்கொரு முறை GST வரி விகிதம் மாற்றம்?

சரக்கு-சேவை வரியை உடனடியாக உயர்த்தும் திட்டமில்லை எனவும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரிவிதிப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழுவின் அமைப்பாளரான சுஷில்மோடி கூறியுள்ளார்.

இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி சார்பில், நேற்று 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பீகார் துணை முதலமைச்சரும், ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழுவின் அமைப்பாளருமான சுஷில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, வரி வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்றாலும், மக்களின் நுகர்வை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சரக்குகளுக்கும், சேவைகளுக்குமான வரியை அரசு குறைத்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக காணப்படுவதால் வரி வருவாயும் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று சுஷில் மோடி தெரிவித்தார். இந்த நேரத்தில் மக்களின் நுகர்வை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக வரி விகிதத்தைக் குறைக்க முடியாது என்று கூறிய அவர், அதே நேரத்தில் வரி விகிதத்தை உயர்த்தவும் முடியாது என்றும் தெரிவித்தார். அதனால், உடனடியாக வரி விகிதங்களை குறைக்கவோ, உயர்த்தவோ வாய்ப்பில்லை என்று சுஷில் மோடி குறிப்பிட்டார்.

நான்கு அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை மூன்று அடுக்குகளாகக் குறைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், அதே நேரத்தில் அதனை அமல்படுத்துவதற்குச் சாதகமான சூழல் நிலவவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலும் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் வரி விகிதங்கள் மாற்றப்பட்டு வந்த போதிலும், இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுஷில் மோடி கூறினார்.

பகிரவும்...