Main Menu

ஆங் சாங் சூகிக்கு ரோஹிங்கியர்கள் கடும் கண்டனம்!

ரோஹிங்கியா முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் நோக்கில் மியான்மார் இராணுவம் செயற்படவில்லை என அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூகி சர்வதேச நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தக் வாதத்திற்கு ரோஹிங்கியா அகதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கய அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் முகமது முஹைபுலா கூறுகையில்,

“மியான்மாரில் ரோஹிங்கயர்கள் இனப் படுகொலை செய்யப்படவில்லை என்று சா்வதேச நீதிமன்றத்திடம் ஆங் சாங் சூகி பொய் கூறியிருக்கிறார். அவர் கூறியது உண்மையா, இல்லையா என்பதை உலகம் முடிவு செய்யும்.

எந்தவொரு திருடனும், தான் திருடியதை ஒப்புக்கொள்ள மாட்டான். அதுபோலத்தான் இனப் படுகொலை குற்றச்சாட்டையும் ஆங் சாங் சூகி மறுக்கிறார். ஆனால், நாங்கள் அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் எங்களுக்கு நீதி கிடைக்கும்.

இனப் படுகொலை நடைபெற்றதற்கான ஆதாரங்களை நாங்கள் உலகின் முன் சமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மியான்மாரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்கயா இனத்தினருக்கு அந்த நாட்டு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. அதன் எதிரொலியாக அந்த இனத்தைச் சோ்ந்த குழுவினர் பாதுகாப்புப் படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 201-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல பொலிஸார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராக்கைன் மாகாணத்தில் இராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

வன்முறைக்கு அஞ்சி 7.4 இலட்சம் ரோஹிங்கயர்கள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், மியான்மாரில் இன அழிப்பு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி நெதர்லாந்திலுள்ள சா்வதேச நீதிமன்றத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியா வழக்குத் தொடா்ந்தது.

கடந்த புதன்கிழமை நடந்த அந்த வழக்கின் விசாரணையில், “பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின்போது மியான்மார் இராணுவம் அளவுக்கதிகமான பலப்பிரயோகம் செய்திருந்தாலும், அதை வைத்து அது இன அழிப்பில் ஈடுபட்டதாகக் கூற முடியாது” என ஆங் சாங் சூகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...