Main Menu

அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றால் பாரதீய ஜனதாவுக்கு அடிமை ஆகி விடுவார்கள்- மு.க. ஸ்டாலின்

டெல்லி பிரதிநிதின்னு ஒருத்தர் இருக்கிறார், தளவாய்சுந்தரம். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தொழில் ரீதியான பார்ட்னராக இருக்கிறார் என்று ஆரல்வாய்மொழியில் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதி களில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரைஆதரித்து தக்கலையில் கடந்த 20-ந்தேதி முதல் கட்ட பிரச்சாரம் செய்தார்.

நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட குமரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரசாரத்திற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வந்தார்.

ஆரல்வாய்மொழியில் நடந்த பிரசார கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் ஆகியோரை ஆதரித்து மு.க ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

தேர்தலுக்கு மட்டும் உங்களை பார்க்க வரும் ஸ்டாலின் அல்ல நான். உங்கள் சுக, துக்கங்களில் பங்கெடுக்கக்கூடிய ஸ்டாலினாக உங்கள் முன் நிற்கிறேன். வரும் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள். சட்டமன்ற தேர்தல் மட்டு மல்ல நாடாளுமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வசந்துக்கு கைச் சின்னத்திலும், நாகர்கோவில் சட்டசபை தேர்தலில் சுரேஷ் ராஜனுக்கும், கன்னியாகுமரி தொகுதியில் ஆஸ்டினுக்கும் வாக்களியுங்கள். கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். அப்போது அவர் உங்களுக்கு செய்திருக்கும் வளர்ச்சிப்பணிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கழகவேட்பாளர் ஆஸ்டின் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சட்டசபையில் அவர் எழுந்தாலே ஆளும்கட்சிகள் உனனிப்பாக கவனிப்பார்கள். அவர் ஆணித்தரமாக, உறுதியாக எடுத்து வைக்கும் வாதங்களையும், அவர் எதிர்கட்சியில் இருந்து ஆற்றிய பணிகளை மறக்க முடியாது.

நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார் என்கிற விஜய் வசந்த். நாடாளுமன்ற இடைத்தேர்தல் ஏன் வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியும். வசந்தகுமாரை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பி வச்சீங்க. பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சினைக்காக அவர் குரல் கொடுத்தார்.

கொரோனா தொற்று நோய் சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம் பெற்று திரும்புவார் என நம்பினோம். அப்போது அவர் மறைந்த செய்து இடியாக வந்தது. எனவே இங்கு இடைத்தேர்தல் நடை பெறுகிறது இடைதேர்தலில் அவரது மகன் விஜய் வசந்துக்கு கைச்சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும்.

முதல்வர் பழனிசாமி.

இயற்கை எழில் கொஞ்சும் ஆரல்வாய்மொழி நகரத்துக்கு வந்திருக்கிறேன். முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி, நாஞ்சில்நாடு என்று அழைக்கப்படும் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறேன். இயற்கை துறைமுகம் என்ற குளச்சல் தொகுதியை உள்ளடக்கிய குமரி மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டத்துக்கு வந்திருக்கிறார். ஊர்ந்து சென்றவர் ஊர் ஊராக சென்றுகொண்டிருக்கிறார்.

நான் சொன்னதற்கு ஊர்ந்து செல்ல பாம்பா பல்லியா எனகேட்கிறார். பாம்புக்கடியின் வி‌ஷத்தை விட துரோகத்துக்கு வி‌ஷம் அதிகமாக இருக்கும். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்காததால் வளர்ச்சி பணிகள் நடக்க வில்லை என்கிறார்.

ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக் கணித்த முதலமைச்சரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்கவில்லை அதனால உங்களுக்கு திட்டங்கள் வரல என வாய்கூசாமல் சொல்கிறார். அவரை தேர்ந்தெடுக்கலாமா. அவரது தொகுதியான எடப்பாடியிலேயே அவர் ஒன்றும் செய்யவில்லை. அவரை முதலமைச்சராக அமர வைக்கக்கூடாது.

இங்கு டெல்லி பிரதிநிதின்னு ஒருத்தர் இருக்கிறார், தளவாய்சுந்தரம். முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தொழில் ரீதியான பார்ட்னராக இருக்கிறார். அவருக்கு குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. அவர் குமரி மாவட்டத்துக்கு எதாவது செய்திருக்கிறாரா. தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர், சசிகலாவால் டெல்லி பிரதிநிதியாக்கப்பட்டவர். சசிகலா காலை வாரிவிட்டவர் இப்போது எடப்பாடி கூட இருக்கிறார். தேர்தலுக்கு பிறகு எடப்பாடி காலை வாரிவிட்டு, பா.ஜ.கவில் போய் சேர்ந்துவிடுவார். அவரது உதவியாளர் கிருஷ்ண குமார் வீடியோ நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிச்சா இல்லியா?

நான் தக்கலைக்கு வந்தபோது உறுதியாக துறைமுகத்தை அமைக்க மாட்டோம் என்றேன். அதன்பிறகு வந்த முதல்வர், ஸ்டாலின் பொய் சொல்கிறார் சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் வராது என்றார். நான் ஆதாரத்துடன்தான் வந்திருக்கிறேன். வாய்புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என பேச மாட்டேன். கலைஞரின் மகன் நான். அதனால் உண்மையைத்தான் பேசுவேன்.

20.02.2021 அன்னைக்கு அதிகாரபூர்வமான மத்திய துறைமுகத்தின் டெண்டர் விளம்பரம் வந்திருக்கு. தெளிவாக அந்த விளம்பரத்தில் இருக்கிறது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் விளம்பரம் வந்திருக்கிறது. இதுகூட தெரியாத முதல்வர் நமக்கு தேவையா. இப்ப வராதுன்னு சொல்லுவாங்க, ஆனா தேர்தலுக்கு பிறகு கொண்டுவருவார். அடுத்து நிச்சயம் நாம் ஆட்சிக்கு வருவோம், துறைமுகத்துக்கு அனுமதி தரமாட்டோம்.

பா.ஜ.க சார்பில் நாடாளு மன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுகிறவர் பொன்.ராதாகிருஷ்ணன். அவர் பொன்.ராதாகிருஷ்ணன் அல்ல பொய் ராதாகிருஷ்ணன். 2014-ல் எம்.பியாக இருந்தபோது எதாவது செய்தாரா. அவர் தேர்தலில் நிற்கும்போது நிறைய உறுதிமொழிகொடுத்தார். குளச்சலில் வர்த்தக துறைதுறைமுகம், கன்னியாகுமரி ஸ்மார்ட் சிட்டி, சாய் சாப் செண்டர், விவசாய கல்லூரி, புற்றுநோய் ஆராய்ச்சிமையம், திக்குறிச்சி கடற்கரை சுற்றுலாதலமாகும், பெருஞ்சாணியில் படகுசவாரி ஏற்படுத்தப்படும், அதி நவீன அறிவியல் மையம், இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவேன் என சொன்னார்.

ஆனால், இதில் ஒன்றையும் அவர் செய்து காட்ட வில்லை. ஐந்து வருடம் மத்திய அமைச்சராக இருந்தார். பா.ஜ.க மத்தியில் ஏழு வரு‌ஷமா ஆட்சியில் இருக்கிறது. பி.ஜே.பி முக்கிய தலைர்களில் ஒருவராக பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அவர் வேஸ்ட் என கருதி, இனி தேர்தல் பற்றியே சிந்திக்காத வகையில் விஜய் வசந்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இன்று பிரதமர் வருகிறார். வழக்கம்போல பொய் சொல்லிகிட்டு போகிறார். அவர் எத்தனை முறை வருகிறாரோ அப்போதெல்லாம் பா.ஜ.க. வுக்கு வாக்கு குறைகிறது. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது ஆண்மை மிக்க பிரதமர் இல்லை. அதனால்தான் அண்டைநாடு சீண்டி பார்ப்பதாக சொன்னார். 2014-ல் பிரதமராக வந்தார் ஏழுவரு‌ஷமாக இந்திய இலங்கை மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். ஆனால் தாக்குதல் நடக்கதான் செய்கிறது. தமிழகத்தில் நம் ஆட்சி அமைந்தபிறகு மீனவர்கள் நலன் காட்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம்.

இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு பல கொடுமைகளை செய்து கொண்டிருக்கிறது. சி.ஏ.ஏ கொண்டு வந்தார்கள். அப்போது நாம் வன்மையாக கண்டித்தோம். மாநிலங்களவையில் அ.தி. மு.க.வின் 11 எம்.பி.க்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து ஓட்டுப்போட்டதால் அது அமலுக்கு வந்தது. இப்போது அதை எதிர்ப்போம் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சட்டத்தால் சிறு பான்மை சமூகத்தை கொச்சைப்படுத்தும் நிலை உள்ளது. சி.ஏ.ஏக்கு எதிராக தமிழக மக்களிடம் நானே போய் 2 கோடி கையெழுத்து வாங்கி ஜனாதிபதியிடம் கொடுத்தோம். சட்டமன் றத்தில் எதிர்த்து பேசினோம். அதனால் தீமை இல்லை என பழனிச்சாமி வாதிட்டார். பாதிப்பு குறித்து நாங்கள் பேசினோம். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இப்போது நாடகம் நடத்துகிறார்.

கருணாநிதி சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்லுவோம் என ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் சொல்லுவார். அவரது மகன் ஸ்டாலின் சொன்னதைத்தான் செய்வான், செய்வதைத்தான் சொல்வான். இப்பதைய தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் சொல்லியிருக்கிறோம். அதில் மீனவர் வாழ்க்கைதரம் உயர பல அறிவுப்புகள் கொண்டுவந்துள்ளோம்.

பழங்குடியினர் லிஸ்டில் மீனவர்களை சேர்ப்பது. மழைக்கால நிவாரண நிதி, விசைப்படகுக்கு மானிய விலை டீசல் 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். படகுகளுக்கு 400 லிட்டர் மானிய எண்ணெய் வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் பரிசல் படகு வாங்க 50 சதவீதம் மானியம் வழங்க்கப்படும்.

பெண்கள் நலனுக்காக குடும்பதலைவிகளுக்கு உரிமைத்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். பெண்கள் உள்ளூர் பேருந்தில் பயணம் செய்ய இலவசம். பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு. கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து செய்யப்படும். பெட்ரோல் 5 ரூபாய், டீசல் 4 ரூபாய லிட்டருக்கு குறைக்கப்படும். பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அரசுத்துறையில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணிகள் தமிழக இளைஞர்கள் மூலம் நிரப்பப்படும். கொரோனா ரெண்டாவது அலை வந்து கொண்டிருக்கிறது. பலர் மாஸ்க் போடவில்லை. வேட்பாளர்களே மாஸ்க் போடவில்லை. நான் டிஸ்டென்ஸில் இருப்பதால் மாஸ்க் போடவில்லை. உரிமையை காக்க உதயசூரியன், உயிரைகாக்க மாஸ்க். நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் நூற்றுக்கு ஐந்துபேருக்கு காய்ச்சல், உடல்வலி இருக்கும். எனவே அதில் கொஞ்சம் கவனமா இருங்க.

நான் கொரோனா வந்த சமயத்தில் சட்டசபையில் குரல் கொடுத்தேன். அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேட்டதற்கு, அம்மா ஆட்சி நடப்பதால் கொரோனா வராது என்றனர். இதனால் உயிருக்கு ஆபத்து என்றேன். அம்மா ஆட்சியில் உயிர் போகாது என்றார். மாஸ்க் கொடுங்க, சானிடைசர் கொடுங்க என கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டார். நீங்க கவலைப்படாதீங்க ஹார்ட் பே‌ஷண்ட், சுகர் பே‌ஷண்டுக்குத்தான் கொரோனா வரும் என்றார். ஆனால் மறுநாள் முதல்வர் மாஸ்க்குடன் வந்தார்.

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எனவே 5000 ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்னோம். அவர்கள் 1000 ரூபாய் கொடுத்தார்கள். மீதமுள்ள 4000 பணத்தை தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளில் அந்த தொகை வழங்கப்படும். கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேற்கு கடற்கரை சாலை சீரமைக்கப்படும். ஏ.வி.எம் கால்வாய் சீரமைக்கப்படும். இயற்கை சுற்றுலாதலங்கள் மேம்படுத்தப்படும். தனியார் காடுகள் சட்டவிதிகள் நடைமுறை சிக்கல்கள் சரிப்படுத்தப்படும்.

நானும் வேட்பாளர்தான் கொளத்தூர் தொகுதியில். ஒட்டு மொத்தமாக நான் முதல்வர் வேட் பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதல்வராக முடியும். மாவட்ட மரியாதையை காப்பாற்ற, மதவெறிபிடித்த பி.ஜே.பியிடம் இருந்து நாட்டை காக்க அ.தி.மு.க ஒருவர்கூட வெற்றிப்பெறகூடாது. வெற்றிபெற்றால் பி.ஜே.பிக்கு அடிமை ஆகிடுவாங்க. ஓ.பி.எஸ் மகன் அ.தி.மு.க எம்.பி அல்ல பா.ஜ.க எம்.பி. அவரது லெட்டர் பேர்டில் அவருடைய தலைவர்கள் படம் இல்லை. மோடி படம்தான் உள்ளது. பி.ஜே.பி உள்ளே நுழையமுடியாது, சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் அதை விடமாட்டோம். இது திராவிட மண்”.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...