Main Menu

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் சார்பாக அரசியல் செய்ய விரும்பினால், ஒரு அரச நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர் அல்லது வேறு எந்த அதிகாரியும் இராஜினாமா செய்யலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசுக்காக அரசியல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் செய்ய வேண்டியது தமது பொறுப்பில் உள்ள நிறுவனங்களை வினைத்திறனாகவும், ஊழல் மோசடிகள் இன்றியும், பயனுறுதியும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் கொண்ட இலாபமீட்டும் நிறுவனங்களாக முன்னேற்றுவதாகும்.

அரச நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்திலேயே இயங்குகின்றன. எனவே அவை எந்த வகையிலும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகிய அரச நிறுவனங்களிடம் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்கள் அல்லது நிதி வளங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

குறுகிய அரசியல் நோக்கங்களில் இருந்து விலகி பலமான ஒரு அரசையும், முன்னேற்றமான பொருளாதாரத்தையும், நீதி நியாயமான சமூகத்தையும் மக்கள் நேய அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசு உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.

இந்த நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக அரச நிறுவனங்கள், அவற்றின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பணிக்குழாமினரின் ஒத்துழைப்பை ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார்.

பகிரவும்...