Main Menu

அயோத்தி விவகாரத்தில் சமரசக்குழுவினால் பயனில்லை – யோகி ஆதித்யநாத்!

அயோத்தி பிரச்சினையில் சமரசக்குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நல்ல திட்டம் என்றாலும், பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடையும் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகாபாரதத்தில் கூட போருக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என குறிப்பிட்ட அவர், அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்தது என்றும் கூறினார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட சமரசக்குழு இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெறமுடியாது என அண்மையில் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான மேன்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட குழு அரசியலமைப்புச் சட்ட அமர்வில் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது.

அதேசமயம் அயோத்தி வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

குறித்த குழு  நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...