Main Menu

அமெரிக்கத் தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் இழுபறி தொடர்கின்ற நிலையில், ஜோர்ஜியா மாநிலத்தில் வாக்குகளை மீள எண்ணுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

16 இடங்களைத் தீர்மானிக்கும் ஜோர்ஜியாவில், ட்ரம்பை விட ஆயிரக்கணக்கான வாக்குகள் பின்தங்கியிருந்த பைடன், தற்போது அவரைவிட ஆயிரத்து 96 வாக்குகள் அதிகம் பெற்று முந்தியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறு மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும் என்ற நிலையில் ஜோ பைடன் 264 இடங்களைப் பெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் 214 இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியா, ஜோர்ஜியா, நெவாடா, வட கரோலினா மற்றும் அலாஸ்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாமல் நீடித்து வருகிறது.

எனினும், இதுவரை டொனால்ட் ட்ரம்புக்கு சாதகமாக இருந்த ஜோர்ஜியா மற்றும் பென்சில்வேனியாவில் ஜோ பைடன் தற்போது முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு,  தபால் வாக்குகள் அதிக அளவில் பைடனுக்கு ஆதரவாக இருந்ததே காரணமாகக் கூறப்படுகிறது. இன்னும், வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அமெரிக்க வீரர்களின் வாக்குகள் உள்ளிட்டவை எண்ணப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 1992ஆம் ஆண்டில் இருந்து குடியரசுக் கட்சி வெற்றி பெற்று வந்த ஜோர்ஜியா மாநிலம் பைடன் வசம் செல்லும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

பகிரவும்...