Main Menu

“அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி கோத்தபாய நல்லிணத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்”

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான தேவைப்பாட்டைப் புரிந்துகொண்டு, அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி என்ற வகையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து வலியுறுத்தியிருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் வடக்கிற்கும், தெற்கிற்குமான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதிகாரம் அவருக்கு இருக்கின்றது. நாட்டின் சிறுபான்மை மக்கள் ஒருபுறமும், பெரும்பான்மை மக்கள் மறுபுறமும் பயணிக்கும்படியாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். 

உண்மையில் நாட்டிலுள்ள அனைவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல், நாம் அடைந்துகொள்வதற்குத் தகுதியானவர்கள் என்றுகூறிவரும் சுபீட்சத்தின் பாதையை ஒருபோதும் கண்டுகொள்ள முடியாது. நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் எமக்கு இன்றியமையாதவையாகும். பெரும்பான்மையானவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் ஊடாக அவற்றை அடைந்துகொள்ள முடியாது என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கிசோதி சரவணமுத்து தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை தேர்தலில் சுமார் 47 சதவீதமானவர்கள் மாற்று வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதுடன், அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே என்பதை நினைவில் கொள்வது சிறந்ததாகும். அவர்களுடைய வாக்குகளும் மதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பகிரவும்...