Main Menu

அத்தியாவசியப் பொருள் கிடைக்க நடவடிக்கை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு  அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பல இடங்களில் சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் உணவுப் பொருட்கள் விநியோகத்தையும் காவல்துறையினர் அனுமதிக்காமல் தடுப்பதாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இணையம் மூலம் ஆர்டர்களை பெற்று விநியோகிக்கும் பிக் பாஸ்கெட், குரோபர்ஸ், பிலிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களும் இதனால் பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுக்குத் தடையில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அளித்தால் விநியோகத்தை தொடர இந்த நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

பொருட்கள் கிடைக்குமோ இல்லையோ என்ற பதற்றத்தால் மக்கள் தேவைக்கு அதிகமாகவும் வாங்கிக் குவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், கடைகளில் உள்ள பொருட்கள் காலியாகி வருகின்றன. பிரட், முட்டை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் அனைத்து மாநில காவல்துறை டிஜிபிக்களுக்கும் தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதில், முழு ஊரடங்கை சட்டரீதியான நடவடிக்கைகளால் உறுதி செய்யும் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை செயல்படுத்த வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பொருட்கள் விநியோகத்தில் எதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிக்கு பாதகம் ஏற்படாதவகையில் காவல்துறையினர் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...