Main Menu

மாவீரர் வரலாறு – லெப்.கேணல்.வீரமைந்தன்

லெப். கேணல். வீரமைந்தன்
( கந்தசாமி மங்களேஸ்வரன் )
கோணாவில்  கிளிநொச்சி.
கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு,  1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான்.  அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட  வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான்.  தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டான்.  பின்னர் தரைத் தாக்குதல் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான்.
ஊரியான் பரந்தன் முன்னரங்கில் படையணியின் வீரமணி கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக வீரமைந்தன்  தனது களச் செயற்பாடுகளைத் துவங்கினான். பாதுகாப்பு கடமைகளிலும் பயிற்சிகளிலும் திறமுடன் செயற்பட்ட வீரமைந்தன் சிறப்புத் தளபதி ராகவன், துணைத் தளபதி ராஜசிங்கம் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்ற அணித் தலைவராக வளர்ந்தான். 1999 ல் பரந்தன் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் படையணியின் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் திறமுடன் களமாடினான் . சுட்டத்தீவு வரையிலான முன்னரங்க பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் தனது செக்சனை திறமுடன் ஈடுபடுத்தினான் . கொம்பனி லீடர் இராசநாயகத்தின் பொறுப்பில் தடையுடைப்பு அணியில் பங்கேற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு தனது திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டான். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் வரதன் முதலானோர் நடத்திய இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சிறந்த இளம் அணித் தலைவனாக வளர்ந்தான்.
ஓயாத அலைகள் – 3 நடவடிக்கை துவங்கிய போது, வீரமைந்தன் தடையுடைப்பு அணியில் செக்சன் லீடராக கடுஞ்சமர் புரிந்தார்.  அம்பகாமம், கறிப்பட்டமுறிப்பு களங்களில் தீரமுடன் செயற்பட்ட வீரமைந்தன்,  இச் சமரில் படுகாயமுற்று சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் பெற்று களமுனைக்கு திரும்பிய வீரமைந்தன் ஆனையிறவு மீட்புச் சமரில் திறமுடன் செயற்பட்டார்.  2000 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களின் கட்டளையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தீவிரமாக களமாடிய வீரமைந்தன் காலில் படுகாயமுற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிக மோசமாக சிதைந்த நிலையில் பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியேற்பட்டது.
படையணியின் மேஜர் பிரியக்கோன் மருத்துவ தளத்தில் வீரமைந்தன் தங்கியிருந்த நாட்களில் அழகாக ஓவியங்கள் வரைவதிலும் வெற்றுப் போத்தல்கள் போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கலைப் பொருட்களைக் செய்வதிலும் தனது நேரத்தை செலவிட்டார்.  தன்னுடன் இணைந்து போராடி வீரச்சாவைத தழுவிக் கொண்ட மாவீரர்களின் நினைவாக பல ஓவியங்களை வரைந்து எமது தளங்களை அழகுபடுத்தினார் . படையணி போராளிகளால் நடத்தப்பட்ட ” அக்கினி வீச்சு ” கையெழுத்து இதழ் வீரமைந்தனின் அழகிய ஓவியங்களைத் தாங்கி வந்து,  போராளிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன.  2001 ம் ஆண்டு படையணியின் பத்தாண்டுகள் நிறைவின் போது, சிறப்பாக செயற்படடவர்களுக்காக தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட சிறப்புச் சான்றிதழய வீரமைந்தன் பெற்றார்.
2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் வீரமைந்தன் வட்டக்கச்சியில் புதிய மருத்துவ தளம் அமைக்கும் பணியில் கடமையாற்றினார். தொடர்ந்து பிரபல்யன் மருத்துவ தளத்தின் பொறுப்பாளராக செயற்பட்டார். தளபதி கோபித் அவர்களின் வழிநடத்தலில் படையணியின் மருத்துவ பொறுப்பாளர் கடற்கதிருடன் இணைந்து காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரிப்பதில் திறமுடன் கடமையாற்றினார். பின் தள நிர்வாகத்தில் பல்வேறு கடமைகளில் நின்ற நவக்குமார் ,ரகுராம், குமுதன், தமிழரசன், முல்லை, ஈழப்பருதி,  வைத்தி, சிலம்பரசன்,  தேவமாறன்,  யாழின்பன் , மதன், முதலானோருடன் இணைந்து பல கடமைகளில் செயற்பட்டார்.  தாக்குதலணி பின்தளத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் தளபதிகளின் வழிகாட்டுதல் படி கலை நிகழ்ச்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் திறம்பட ஒழுங்குபடுத்தி நடத்துவதில் மிகுந்த விருப்புடன் செயற்பட்டு போராளிகளின் அன்பையும் பாராட்டையும் பெற்ற பொறுப்பாளராக வீரமைந்தன் திகழ்ந்தார். மேலும் தனது சக தோழன் கப்டன் இளஞ்சுடர் அவர்களின் களச் செயற்பாடுகளை களப் படப்பிடிப்பாளர் தமிழவள் மற்றும் இசைப்பிரியாவுடன் இணைந்து துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் பதிவு செய்தார்.
2005 ம் ஆண்டு வீரமைந்தன் மீணடும் தாக்குதலணிக்கு வந்துவிட்டார்.  பிரிகேடியர் தீபன் அவர்களின் G-10 போர்ப்பயிற்சி கல்லூரியில் தாக்குதலணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்று தன் களச் செயற்பாடுகளை தொடர்ந்தார்.  இன்னும் நேராக நிமிர்ந்து நடக்க முடியாத உடல்நிலையிலும் தளபதிகள் மற்றும் சக தோழர்களின் மிகுந்த ஊக்கத்தினால் வீரமைந்தன் தனது பிளாட்டூனை பயிற்சிகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் திறமுடன் நடத்தினார். முகமாலை கண்டல் முன்னரங்கிலும் நாகர்கோவில் முன்னரங்கிலும் பாதுகாப்பு பணியில் சிறப்புடன் செயலாற்றினார்.  இந் நாட்களில் வீரமைந்தன் இடையறாது தொடர்ந்து நடந்து நடந்து திரிந்ததால் அவருடைய கால் அங்கவீனம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி நேராக நிமிர்ந்து நடக்கலானார். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் தென்னரசன், பாவலன் முதலானோருடன் இணைந்து தனது அணியை பல்வேறு சிறப்பு பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தினார்.
2006 ம் ஆணடில் முகமாலை களமுனையில் யுத்தம் மூண்டபோது  வீரமைந்தன்,  படையணியின் தாக்குதல் தளபதி அமுதாப் புடன் நாகர்கோவில் களமுனையில் நின்று செயற்பட்டார்.  பின்னர் சிறப்புத் தளபதி கோபித்தின் வழிநடத்தலில் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதில் ஓய்வின்றி செயற்பட்டார்.  இந் நாட்களில் இவருடைய இணைபிரியா தோழன் செல்லக்கண்டு இவருடன் நின்று பல்வேறு கடமைகளில் திறமுடன் கடமையாற்றினார்.
2007 ம் ஆண்டு அமுதாப்புடன் இணைந்து கொம்பனி லீடராக செயற்பட்ட வீரமைந்தன்,  மன்னார் களமுனையில் சிறப்புத் தளபதி கோபித் அவர்களால் களமிறக்கப்பட்டார் .  இங்கு எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்தார். தாக்குதல் தளபதியாக வளர்ந்த வீரமைந்தன்,  தனது சக தோழர்கள் சோழநேயன், வாணன், செல்லக்கண்டு முதலானோருடன் இணைந்து சிறந்த பாதுகாப்பு வியூகங்களை உருவாக்கி எதிரியின் முன்னேற்றத்தை பல மாதங்கள் தடுத்து நிறுத்தினார்.  மன்னார் பெரிய தம்பனை பகுதியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு நகர்வை வீரமைந்தன் மிகுந்த மன உறுதியுடனும் அசாத்தியமான வீரத்துடனும் தடுத்துப் போராடி மாபெரும் வெற்றிகளைப் பெற்று எமது இயக்கத்தின் வீரமரபுக்கு பெருமை சேர்த்தார்.
2008 ம் ஆண்டு துவக்கத்தில் பனங்காமம் களமுனையில் எதிரி பாரிய ஆக்கிரமிப்புக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதை தொடர்ந்து,  அங்கு கடமையிலிருந்த தாக்குதல் தளபதி செங்கோலன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வீரமைந்தன் பனங்காமத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு உடனடியாகவே தனது அதிரடிச் செயற்பாடுகளைத் துவங்கிய வீரமைந்தன்,  செங்கோலனின் கட்டளையில் எமது முன்னரண் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினார்.  படையணியின் மூத்த அணித் தலைவர்கள் ஜெயசீலன் , பகலவன் (மாவைநம்பி ), படைய ரசன்,  புயலரசன் , செல்லக்கண்டு , கரிகாலன் முதலானோருடன் இணைந்து பல முறியடிப்புத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார்.  ஏராளமான கிளைமோர்களையும் நிலக் கண்ணிவெடிகளையும் கையாண்டு,  குறைந்தளவிலான போராளிகளைக் கொண்டு பெரும் பிரதேசத்தை பாதுகாத்து நின்றார்.  இவ்வாறானதொரு திட்டத்தின் படி எதிரிக்கு மிக நெருக்கமான பகுதியொன்றில்,  வீரமைந்தன் தனது குழுவுடன் கண்ணிவெடிகளை நிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது,  எதிரி திடீரென ஒரு நகர்வை மேற்கொண்டான் . வீரமைந்தன் உடனடியாக முறியடிப்புத் தாக்குதலை தீரமுடன் நடத்தினர். இந்த வீரம்மிக்க தாக்குதலில் படுகாயமடைந்த வீரமைந்தன் அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார.
இளம் வயதிலேயே தாயக விடுதலை வேட்கையுடன் புலிகள் இயக்கத்தில் இணைந்த வீரமைந்தன், பலமுறை படுகாயங்களுக்கு உள்ளாகியும் இறுதிவரை உறுதியுடன் போராடினார். தனது சக போராளிகளிடம் மிகுந்த அன்பும் சகோதரனுக்குரிய பரிவும் கொண்ட வீரமைந்தன் சிறந்த போராளிக் கலைஞனாகவும் திகழ்ந்தார்.  இவருடைய சீரிய செயற்பாடுகளுக்காக எமது தேசியத் தலைவராலும் கட்டளைத் தளபதிகள் பால்ராஜ், தீஜெயம் ஆகியோராலும் பாராட்டப் பெற்ற போராளியாக வீரமைந்தன் விளங்கினார். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த வீரமைந்தன் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்ற போராளியாக திகழ்ந்தார்.  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப். கேவீரமைந்தன் அவர்களின் உற்சாகம் பொங்கும் வரலாறு தமிழினத்தின் வீரமரபாக என்றும் நிலைத்திருக்கும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
பெ.தமிழின்பன்
பகிரவும்...