மாங்குளத்தில் வீசிய சுழல் காற்றினால் 22 வீடுகள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியது.
நேற்று மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நேற்று மாலை மழை பெய்த வேளையில் வீசிய காற்றின் காரணமாக இரண்டு வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் இருபது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதியில் இருக்கின்ற சந்தை பகுதியிலும் கூரையில் சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் மேலும் சில இடங்களில் இந்த காற்றினால் சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவி பிரதேச செயலாளர் இ .ரமேஷ் மற்றும் மாங்குளம் பகுதி கிராம உத்தியோகத்தர் தனபால்ராஜ் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் மு.முகுந்தகஜன் ஆகியோர் குறித்த சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தனர்.