Main Menu

வியாழக்கிழமை அமெரிக்கா- சிறிலங்கா இரு தரப்புகளிடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தை

அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

வரும் வியாழக்கிழமை அமெரிக்காவில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், நடைபெறும் இந்தப் பேச்சுக்களில், பிரதானமாக தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு, மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட, நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம், சிறிலங்கா மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ- இராணுவ உறவுகள், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் சிறிலங்காவின் அமைதிகாப்புக்கான உதவி, கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி, ஈரான் மீதான தடைகள், மிலேனியம் சவால் நிதிய  மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, வணிக மற்றும் முதலீடு, விஞ்ஞானம், தொழில்நுட்ப, கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு, இணையவெளிப் பாதுகாப்பு உள்ளி்ட விவாகரங்கள் குறித்தும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன.

அமெரிக்காவில் இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, மெக்சிக்கோவுக்கு சென்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா குழுவில், வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள றொட்னி பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் அனுராத விஜேகோன், வெளிவிவகார அமைச்சின் வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான பணிப்பாளர் சானிகா திசநாயக்க, வெளிவிவகார அமைச்சின் சட்ட மற்றும் ஐநா விவகாரங்களுக்கான பணிப்பாளர் சோபினி குணசேகர, மற்றும் ஜெயந்த பெர்னான்டோ, அனுஸ்க விஜேசிங்க உள்ளிட்டோர் இடம்பெறவுள்ளனர்.

திலக் மாரப்பன தலைமையிலான இந்தக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.

பகிரவும்...