Main Menu

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளின் போக்கை, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றியமைத்ததாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Impactstories_podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை தனது வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலத்தில், IMF-உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருந்ததாக கூறினார்.

அந்த நேரத்தில் வொஷிங்டனில் IMF பிராந்திய அதிகாரிகளைச் சந்தித்தபோது, அவர்கள் இலங்கையின் நிலைமை குறித்து மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாக அலி சப்ரி தெரிவித்தார்.

“நான் வொஷிங்டனுக்குச் சென்றபோது பிராந்திய இயக்குநர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் இலங்கையைப் பற்றி மிகவும் எதிர்மறையாகப் பேசினர், எங்கள் நிலைப்பாட்டைக் கேட்க அவர்கள் விருப்பம் காட்டாதது போல் தோன்றியது” என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, IMF முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் பிரதிப் பணிப்பாளர் கீதா கோபிநாத் ஆகியோரை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மதிய உணவு சந்திப்பில் ஈடுபட்டதாக அலி சப்ரி தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் போது பேச்சுவார்த்தை எவ்வாறு நடைபெற்றது என நிர்மலா சீதாராமன் கேட்டதாகவும், நிலைமை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றும், IMF அதிகாரிகள் பல பிரச்சினைகளை முன்வைத்ததாகவும் தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, “கவலைப்பட வேண்டாம். நீங்கள் சந்திப்பதற்கு முன்பு நான் கிரிஸ்டலினா ஜோர்ஜீவாவைச் சந்திக்கிறேன். இலங்கை குறித்து நான் பேசுவேன்,” என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக அலி சப்ரி நினைவுகூர்ந்தார்.

பின்னர் IMF தலைமையினரைச் சந்தித்தபோது, அங்கிருந்த சூழ்நிலை முழுமையாக மாறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அவர்களின் பேச்சுத் தொனி, அணுகுமுறை, சந்திப்பு சூழல் என அனைத்தும் மாறியிருந்தன,” என்று அலி சப்ரி கூறினார்.

மேலும், தாம் சந்தித்தபோது கிரிஸ்டலினா ஜோர்ஜீவா, “நான் இப்போதுதான் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தேன். அந்த சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை இந்தியா குறித்து அல்ல, இலங்கை குறித்து பேசப்பட்டது,” என தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமனின் அந்த தலையீடு, பின்னர் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக அமைந்ததாக அலி சப்ரி தெரிவித்தார்.

2022-ஆம் ஆண்டில் இலங்கை தனது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது.

ஆனால், இந்த நெருக்கடி பல ஆண்டுகளாகவே உருவாகிக்கொண்டிருந்தது.

பெரும் கடன் சுமை, பரவலான வரிக்குறைப்புகள், தீர்ந்துபோன அந்நியச் செலாவணி கையிருப்பு, கொவிட்-19 காலத்தில் சுற்றுலாத்துறை முடங்கியது மற்றும் இரசாயன உரங்கள் மீதான திடீர் தடை உள்ளிட்ட கொள்கை ரீதியான தவறுகள் ஆகியவை இந்நெருக்கடிக்குக் காரணங்களாக அமைந்தன.

2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ய நாட்டிடம் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது மின்வெட்டு, பற்றாக்குறை, விலையேற்றம் மற்றும் மாபெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

2022 ஏப்ரல் மாதம் அது தனது வெளிநாட்டுக் கடன் செலுத்துதலை நிறுத்தியது. அப்போதுதான், இந்தியா தனது ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கையைப் பின்பற்றி, அவசரகால நிதியுதவி மற்றும் விநியோகங்களுடன் தலையிட்டது.

அதே நேரத்தில், கொழும்பின் மீட்சிக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச நிறுவனங்களையும் அது வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.