போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது!
போலியான ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விற்ற விவகாரத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின், சில இடங்களில், போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாகவும், சென்னை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரகசியமாக கண்காணித்த சிறப்பு தனிப்படை போலீசார், போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பு கும்பலை மொத்தமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இந்த போலி பாஸ்போர்ட் கும்பல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அலுவலகமோ, வீடோ எடுத்து இயக்காமல், எளிதில் பிடிபடாத வகையில், ஆங்காங்கே, கிடைக்கும் இடத்தில், போலி பாஸ்போர்ட் மற்றும் அதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
இந்த நெட்வொர்க்கிற்கு மூளையாகவும், தலைவியாகவும் செயல்பட்ட, திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணை, கியூ பிராஞ்ச் சிறப்பு தனிப்படை போலீசார், முதலில் கைது செய்தனர்.
தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், கலைச்செல்வி அளித்த தகவலின்படி, சென்னை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரையும், இலங்கையைச் சேர்ந்த தரகர்கள் விமலன், உதயபாஸ்கர், கிருபராஜா ஆகியோரையும் கைது செய்தனர். கலைச்செல்வி உட்பட கைது செய்யப்பட்ட 13 பேரிடமிருந்து, 100 போலி பாஸ்போர்ட்டுகளை, கியூ பிராஞ்ச் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட 13 பேரும் சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.