போலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்

போலந்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்று அண்மைக்காலமாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
கடந்த பத்தாண்டில் அங்கு ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Miejsce Odrzanskie என்பதே அந்தக் கிராமத்தின் பெயராகும்.
அங்கு 96 வீடுகள் மாத்திரமே உள்ள நிலையில், ஒற்றையடிப் பாதைதான் அங்கு செல்வதற்கான வழியாக இருக்கின்றது.
இந்தநிலையில், போலந்துத் தீயணைப்புத்துறை இளம் தொண்டர் குழுக்களுக்குப் போட்டி ஒன்றை அண்மையில் அறிவித்திருந்தது.
அந்தக் கிராமத்திலிருந்து வந்த குழுவில் அனைவரும் பெண் பிள்ளைகள் என்பதால் ஊடகங்களின் கவனத்தை அது ஈர்த்தது.
தொலைக்காட்சி நிறுவனங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன.
பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பதன் பின்னணியை ஆய்வுசெய்ய ஆய்வாளர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியின் மேயர் ஒரு படிக்கு மேலே சென்று பெண் குழந்தைக்கு அடுத்து ஆண் குழந்தையாய் பிறந்தால் பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலுமிருந்து மருத்துவர்கள் நகர மேயரைத் தொலைபேசியில் அழைத்து, ஆண் குழந்தை பிறப்பதற்குரிய சாத்தியங்கள் தொடர்பாக குறிப்புகளை வழங்கி வருகின்றனர்.
கடந்த பத்தாண்டில் பிறந்த 12 குழந்தைகளும் பெண் பிள்ளைகள் என்பது தற்செயல் என்றும் சிலர் கூறுகின்றனர். போலந்தின் பல கிராமங்களில் மக்கள்தொகை வெகுவாகச் சரிடைந்து வருகின்றது.
Miejsce Odrzanskie-வில் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் 1,200 பேர் வாழ்ந்து வந்தனர். இப்போது 272 பேர் மட்டுமே அங்கு வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.