புலம்பெயர் மக்கள் தமது அன்றாட கடின உழைப்பில் ஒரு பகுதியினையே இங்கு வலிசுமந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு வழங்குகின்றார்கள்! சுரேஷ் எம்.பி பேச்சு
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர் தமிழர்களின் உதவி வழங்கும் அமைப்பான “பார்வை” அமைப்பினதும், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் “ரி.ஆர்.ரி வானொலி” நேயர்களினதும் ஆதரவுடன் போரால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.09.2014) கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெற்றன.
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள்,
1970 கள் வரை கல்வியில் இலங்கையில் முன்னணி வகித்த வடக்கு மாகாணம் இன்று கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யுத்தம் எம் உயிர்கள் உடைமைகளை மட்டும் காவு கொள்ளவில்லை. நமது சமூகத்தின் கல்வியிலும் மிகப் பெரும் அழிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது உரையில் யுத்த அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து எமது இலக்கு நோக்கி பயணிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். எம்மை மீளெழுப்புவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. தனிப்பட்ட வாழ்வாயினும் சரி சமூக வாழ்வாயினும் சரி சவால்களை வெற்றிகரமாக சந்தித்து முன்னேற முக்கியமான ஆயுதம் கல்வியாகும்.
இவ்வகையில் ஏழ்மை காரணமாகவோ இயலாமை காரணமாகவோ யுத்த அனர்த்தங்கள் காரணமாகவே எமது இளைய சமூகத்தின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. எனவே அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் தேவையை முடிந்தளவு பூர்த்தி செய்து கைதூக்கி விட வேண்டியது சமூக அக்கறையுள்ள எம் அனைவரதும் கடமையாகும். இந்த வகையில் கிளிநொச்சி திருநகர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்க முன் வந்த லண்டன் மாநகரைச் சேர்ந்த பார்வை என்கின்ற புலம்பெயர் தமிழர் அமைப்பின் உதவிக்கு எமது சார்பிலும் திருநகர் மக்கள் மாணவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பரந்தன் மற்றும் கிளாலி நிகழ்வுகளில் அவர் உரையாற்றுகையில்,
உங்களுக்கு வழங்கப்படும் இவ்வுதவிகள் ஆனது பெரும் பணம் படைத்தோர் வழங்கிய உதவிகள் அல்ல மாறாக தமது அன்றாட கடின உழைப்பில் ஒரு பகுதியினையே இங்கு வலிசுமந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு உதவுவதற்கென அனுப்பியுள்ளனர். அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் பாலமாகவே நாம் செயற்படுகின்றோம்.
அவர்களின் இப்பெரும் உதவிக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் நீங்கள் ஒவ்வொரு வரும் கல்வியில் உயர்ந்த நிலைக்கு வந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சமூகத்திற்கும் இவ்வுலகிற்கும் பயன்படக் கூடிய ஒரு சிறந்த உயர்ந்த பிரஜையாக மிளிர வேண்டும் இதுவே அவர்களதும் எமதும் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வுகளின் முடிவில் கிளாலி மக்களின் வேண்டுகோள்களுக்கு பதிலளித்து அவர் உரையாற்றுகையில், அவர்களது குடி நீர்த்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அவசியப்படுகின்ற பொதுக்கிணறு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அங்கு வாழும் பெண் தலைமை குடும்பங்கள் தொடர்பிலான விபரங்களையும் அவர்களுக்குள்ள ஆற்றல்களையும் விரைவில் தருமாறும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட சில வாழ்வாதார உதவிகளை உருவாக்கி தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் தமதுரையில்,
யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகளாகியும் யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து முழுமையாக நாம் இன்னும் மீண்டெழவில்லை. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயமென பெரும் அபிவிருத்திகள் செய்வதாக தார் வீதிகளும், இராணுவ முகாங்களும் அமைத்துவரும் அரசாங்கம் யுத்தத்தினால் பழி வாங்கப்பட்ட தமிழ் மக்களை பஞ்சைகளாய், பாராரிகளாய் தம்மிடம் கையேந்தி வாழும் மக்களாகவே வைத்திருக்க விரும்புகின்றனர்.
தம்மால் அழிக்கப்பட்ட வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் மீளக்கட்டியெழுப்புவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகின்றனர். வீழ்வது தவறல்ல வீழ்ந்தே கிட்பதுதான் தவறு நாம் அனைவரும் எமது காலில் எழுந்து நிமிர்ந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்கு வலுவுள்ள ஒவ்வொருவரும் வலுக்குறைந்தோருக்கு கை கொடுக்க வேண்டும்.
இவ்வகையில் ஒருவரை ஒருவர் கைதூக்கிவிட்டு நாம் அனைவரும் கைகோர்த்து எமது இலக்கை நோக்கி உற்சாகத்துடன் பயனிக்க வேண்டும். இதற்கு எம்மை தயார் செய்ய வேண்டும் இவ்வகையில் அழிவுகளை சந்தித்து தளர்ந்திருக்கும் எமது மக்களை பலப்படுத்த அவர்களுடைய வாழ்வாதாரம் கல்வி உட்பட பல முனைகளிலும் நாம் செயற்பட வேண்டியிருக்கின்றது.
இன்று லண்டனைச் சேர்ந்த பார்வை அமைப்பும், பிரான்சைச் சேர்ந்த ரி.ஆர்.ரி வானொலி ஆகிய புலம்பெயர் அமைப்புக்களின் அளப்பெரும் உதவியுடன் உங்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதானதானது கல்வியில் உங்களுக்கு ஏற்படக் கூடிய தடைகளை ஓரளவேனும் தகர்த்து கல்வியில் உங்களுக்கு உற்சாகத்தை ஊட்டுவதற்காக நாமும், இவ்வுதவிக்கு பங்களித்த அனைவரும் எதிர்பார்ப்பது உங்கள் மீளெழுச்சியைத் தான்.
நாம் உழைத்து சம்பாதிக்கின்ற போது ஒவ்வொரு ரூபாவும் எமக்கு பெறுமதியாக தெரிகின்றது. ஆனால் இலவசமாக கிடைக்கும் போது அவற்றின் பெறுமதி நமக்கு தெரிவதில்லை. இவ்வுதவியை செய்த ஒவ்வொருவரும் கடும் பனியிலும், நள்ளிரவிலும் தம்மை வருத்தி வேலை செய்த கூலியின் ஒரு பகுதியையே உங்கள் உயர்விற்காக மனமுவந்து வழங்கியுள்ளனர். எனவே கடின உழைப்பின் பயனாக பெற்ற இவ்வுதவிகளை முழுமையாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி நீங்கள் முன்னேற வேண்டும்.
யுத்தங்களோ அனர்த்தங்களோ நம் சொத்துக்களை சுகங்களை அழிக்கலாம். ஆனால் ஒருவரின் கல்வியை எதனாலும் அழிக்க முடியாது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அறிவே பலம். எனவே உங்களின் கல்வி வளர்ச்சியை உங்களதும், உங்கள் சமூகத்தினதும் உயரிய மாற்றத்திற்கான முக்கிய கருவியாகும். இவ்வகையில் எமது சமூகத்தின் மாற்றத்திற்கு உங்கள் வளர்ச்சி அவசியம். உங்கள் வளர்ச்சிக்கு ஏற்படும் தடைகளை தகர்ப்பதில் நாம் தொடர்ந்து ஒத்துழைப்போம் என தனதுரையில் மேலும் தெரித்தார்.
கிளிநொச்சி திருநகர், பரந்தன், கிளாலி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமாகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட சைவ மங்கையர் கழக செயலாளர் செல்வராணி சோமசேகரம் பிள்ளை, சமூக சேவகர் குகன், பரந்தன் கிராம சேவகர் சந்திரன் மற்றும் விளையாட்டுக்கழகம், கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளில் முதலாம் ஆண்டு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான 250 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை காலணிகள் ஆகியனவும் வழங்கப்பட்டன.
பகிரவும்...