Main Menu

புலனாய்வுத்துறையின் மூத்த தளபதி” பிரிகேடியர் கபிலம்மான் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுவணக்க நாள் .

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலை மண்ணில் உதயமாகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவன் வழியில் நடந்தவர்தான் கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை.

1984இல் தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் முன்னாள் திருமலை தளபதி புலேந்தி அம்மான் அவர்களிடம் பயிற்சி பெற்றார்.
அதன் பின்னர்………
திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லதொரு உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார்.

பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வாராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.
1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்க பட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்கப்பட்டார். எதிரிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்பதில் என்றும் விழிப்பாக இருப்பார்.

மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர். தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்லதொரு பொறுப்பாளனாக இருந்தவர்.

அவரை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும். சிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது பணரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேசத்துரோகிகள் என்று தண்டனை வழங்கப்பட்டவர்களின் குடும்பங்கள், விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருதிவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பற்றி தெளிவுபடுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பங்களுக்கு பண உதவி செய்து நல்லதொரு நடப்புறவைக் கட்டி அமைத்தவர்.

எந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான். மக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்பிவைப்பார். அதன் பின்னர் அவர்களுக்கான உதவித் திட்டத்தை தன் வரையறைக்குள் முடியுமானவரை செய்து முடிப்பார். அல்லது அதனை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொழுதும் அமைப்பின் மீது நல்லதொரு அபிப்பிராயம் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். திருமலை மக்கள் மனதில் என்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார். அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை ஈழத்தின் எம் ஜீ ஆர் என்று பாராட்டுகிறார்கள்.
போராளிகளுக்கும் நல்லதொரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையாக இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியபோது அதை விரும்பாமல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்டபோது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்துக்கொள்ளும் வேலையை மட்டுமே செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம் என இறுதி வரை வாழ்ந்தவர்.

என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை.
இவருக்காக கொடுக்கப்பட்ட புதிய வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார்படுத்தலுக்காகவே அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது அதிகம்.

அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதிவண்டியில் அல்லது போராளிகளினை கொண்டுசென்று விடும்படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. பெரும்பாலான வேளைகளில் யாரிடமும் உதவி கேட்காமல் நடந்தே வீடு செல்வார். யாருக்கும் தன்னால் இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது அவரின் எண்ணம்.

அவர் வாழ்ந்த வீடு மிகவும் ஓலைக் குடிசையாகும். தாங்கள் நிதி உதவி செய்கிறோம் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம் என்று அவரின் வெளிநாட்டு நண்பர்கள் தெரிவித்தபோதெல்லாம், நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்களுக்காக போராடி சாகப்போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருதநேரிடும், அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. என் மீது யாரும் எந்த குறையும் சொல்லக்கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டேன் என்பார்.

இவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகளுக்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகளுக்கு என்று தெரிவித்தார். எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட அம்மான் அவர்கள் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார்.

போர் சூழல் காரணமாக பாதிப்பிற்குள்ளாகி வறுமையில் வாடும் மக்களுக்கு அவரவருக்கு தகுந்தாற்போல் சுய தொழில் செய்து வாழ்வதற்கு ஏற்ப நிதி உதவிகளை செய்யவும், அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கவும், அவ்வாறான தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து கூட்டுறவாகச் செயல்படவுமென தேவையில் உதவி, மாணவர்கள் தங்ககம் போன்ற மற்றும் பல வெகுஜன கிளை அமைப்புகளை உருவாக்கி அதனூடாக பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த பெருமகன் இந்த கபிலம்மான். இப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். அவரின் நேரடி உதவியினூடு கல்விபயின்று பல்கலைக்கழகம் சென்று படங்கள் பெற்று, உயரிய பதவிகளை அலங்கரிப்போரும், போர்க்காலங்களில், அதன் பிறகும் மக்களுக்கு அளப்பெரும் சேவைகள் புரிந்தோரும் இன்னும் சாட்சிகளாக வாழ்வது அவரின் பெருமைகளுக்கு சான்று.

போராட்டத்துடன் தொடர்பில் இல்லாதுவிடினும், தமிழீழத்தின் பின்தங்கிய கிராமங்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் போன்ற இடங்களிலிருந்து கடின உழைப்பு, பெரும் பிரயத்தனம், விடாமுயற்சி போன்ற செயற்பாடுகளால் முன்னேறுபவர்கள், மற்றும் அவ்வாறான துன்பியல் வாழ்வினுள்ளும் கல்விகற்று முன்னுக்கு வந்துகொண்டிருப்பவர்கள் பற்றியெல்லாம், அவ்வாறானவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இடையூறுகள் மற்றும் அவர்களின் குடும்ப விபரங்கள்பற்றியெல்லாம் தகவல்களைத் திரட்டிவைத்திருப்பதோடு மட்டுமன்றி அவர்களுக்கெல்லாம் ஏதோவொருவிதத்தில் யாரென்றும் தெரியாதவகையில் உதவிகள் புரிந்திடுவார். அவ்வாறானவர்களின் நாளாந்த வாழ்க்கை வழக்குகளைக் கண்காணித்துக் கொள்ளுமாறு தனது பிரிவின் போராளிகளில் சிலரை பொறுப்பாக நியமித்திடுவார். அவ்வாறானவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களைக் களைந்திடுவார்.

இன்னும் எத்தனை எத்தனை, அவரைப்பற்றி சொல்லலாம் வார்த்தைகள் இல்லை.

கபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் புன்னகையை அந்த குழந்தையில் காணலாம்.

கபிலம்மானின் வீரம் செறிந்த பல தாக்குதல்களை பாதுகாப்பு கருதி பிரசுரிக்க முடியாது. மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன், தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்.

கபிலம்மானின் அந்த உயரிய பண்பும், வீரமும், நட்புறவும் என்றென்றைக்கும் அவர் பழகிய மக்களின் மனதை விட்டகலா. எண்ணூழி சென்றும் எமக்கு விடுதலையை பெற்று தரும்.

அன்புடன்: நடேசன்.

பகிரவும்...
0Shares