Main Menu

திலீபனின் பெயராலாவது தமிழ் கட்சிகள் ஒற்றுமைப் படுமா?

மணிவண்ணன் ஒருவிதத்தில் தமிழரசுக் கட்சியை பாதுகாத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அவருடைய கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவரைக் கையாண்ட விதம், கையாண்ட காலம், அதன் விளைவுகள், அதனால் ஏற்பட்ட பொதுசன அபிப்பிராயம் என்பவற்றை தொகுத்துப் பார்த்த தமிழரசுக்கட்சி தன்னை சுதாகரித்துக் கொண்டுவிட்டதா?

தேர்தலுக்கு முன்பு ஒப்பீட்டளவில் கூட்டமைப்புக்குள்தான் அதிகம் குழப்பங்கள் நிலவின. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் தமிழரசுக் கட்சிக்குள்ளும்  பூசல்கள் அதிகரித்துக் காணப்பட்டன.

சுமந்திரன், ஸ்ரீதரன் ஓரணி. ஏனையவர்கள் மற்ற அணி என்று இரண்டு அணிகள் இயங்கின. சசிகலாவின் விருப்பு வாக்கு விவகாரத்தில் கட்சித் தலைமையின் இயலாமை வெளிப்பட்டது. கலையரசன் நியமனத்திலும் பிரதேச உணர்வுகளை மிகத் தந்திரமாக பயன்படுத்தி மாவையைக் காய் வெட்டினார்கள்.

சுமந்திரனின் பின்பலத்தோடு ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற நினைத்தபொழுது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் அவர்களுக்கு எதிராக அணித்திரட்சி ஒன்று  ஏற்பட்டது. குறிப்பாக தீவுப் பகுதிக்கிளை தேர்தலுக்கு முன்பிருந்தே சுமந்திரன், ஸ்ரீதரன் கூட்டை கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்களோடு கொழும்புக் கிளையைச் சேர்ந்தவரும் அதேசமயம் தீவுப் பகுதியையும் சேர்ந்தவரும் ஆகிய  சட்டத்தரணி தவராசா இணைந்து கொண்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அந்த அணிதான். மாவையும் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு.

இவ்வாறானதொரு பின்னணியில் மாவையின் தலைமைத்துவம் ஈடாடத் தொடங்கியது. தமக்கு எதிராக செயற்பட்ட தீவுப் பகுதிக் கிளை மற்றும் சரவணபவன் போன்றோருக்கு எதிராக  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீதரனும் சுமந்திரனும் கட்சியிடம் கேட்டிருந்தார்கள்.

தேர்தலுக்குப் பின்னர் இந்தக் குழப்பங்கள் மேலும் அதிகரித்தன. கட்சி உடையக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்தன. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பதாகவும் ஒரு தகவல் வந்தது. இப்படிப்பட்டதொரு குழப்பமான நிலைமையில்தான் திருகோணமலையில் ஓகஸ்ட் 15 ஆம் திகதி  கட்சியின் அரசியற்குழு கூடியது.

அக்கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்படலாம், கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உட்பூசல்கள் விபரீதமாக வெடித்துக் கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், கட்சியின் உயர்மட்டம் நிலைமைகளை சமாளித்துக் கொண்டது.

அதன்பின்னர், ஓகஸ்ட் 29 ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலும் குழப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சம்பந்தர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், தமிழரசுக் கட்சி எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு துரைராஜசிங்கத்தைப் பலியாடாக்கிவிட்டு நிலைமைகளைக் கடந்து போவதாகவே தெரிகிறது.

மணிவண்ணனை அவருடைய கட்சி கையாண்ட விதத்திலிருந்து தமிழரசுக் கட்சி பாடங்களைக் கற்றுக் கொண்டதா? அதன்மூலம் கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உட்பூசல்களை இப்போதைக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள். யாருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியின் தலைமையைக் கைப்பற்றும் தனது திட்டத்தை ஸ்ரீதரனும்  ஒத்திவைத்திருப்பதாகத தெரிகிறது. எல்லாரும் பிறகொரு காலத்துக்காக காத்திருக்கிறார்கள். மக்கள் முன்னணியைப்போல எடுத்த எடுப்பில் நிலைமைகளைப் போட்டுடைக்க அவர்கள் தயாரில்லை என்றே தெரிகிறது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மணிவண்ணன் கட்சிக்கு எதிராக முழுமையாக செங்குத்தாக திரும்புவதாகவே தெரிகிறது. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அவர் ஒரு புதிய கட்சியை தொடங்கியிருக்கவில்லை. தனது கட்சிக்கு எதிராக பகிரங்கமாக பிரகடனங்கள் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.

ஆனால், தானும் முன்னணிதான் என்று காட்ட முற்படுகிறார். தனக்கென்று தனியாக இளைஞர் அமைப்புகளையும் சட்டவாளர் அமைப்புகளையும் கட்டி வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்களை சிதறவிடாமல் சேகரித்துத் திரட்டி வருகிறார். அதாவது, மணிவண்ணன் அவருடைய கட்சித் தலைமையால் நீக்கப்பட்ட பின்னரும் தனித்து நிற்கப் போகிறார்.

அவர் தனிக்கட்சி அமைப்பாரா அல்லது யாரோடாவது இணைவாரா என்பது தெரியவில்லை. ஆனால், தனக்கு வாக்களித்த மக்களையும் அந்த மக்களை திரட்டித்தந்த தனது ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் தன்னை விட்டுப் போகாதபடிக்கு ஓரணி ஆக்கிவருகிறார்.

இது தமிழ் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாகவே இருக்கும். 10 ஆண்டுகள் காத்திருந்து அக்கட்சி சிறுகச்சிறுக கட்டியெழுப்பிய  வெற்றிகள் உடைக்கப்படும் ஒரு நிலைமை. பெற்ற வெற்றியைக்கூட கொண்டாட முடியாத ஒரு நிலைமை.

உட்கட்சிப் பூசல்களைச் சமாளிக்க இப்பொழுது முன்னணியினர் தங்களை ஓர் இயக்கம் என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செயலில் தம்மை ஓர் இயக்கமாக கடந்த 10 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பத் தவறிய கட்சியானது இப்பொழுது உட்கட்சிப் பூசல்களை வெற்றிகொள்வதற்கு தன்னை ஒரு மக்கள் இயக்கம் என்று கூறிக்கொள்வது பலமா, பலவீனமா?

இந்த இடத்தில்தான் அக்கட்சியின் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் ஒரு விடயத்தைச்  சுட்டிக் காட்டுகிறார்கள். வெற்றிபெற்ற கையோடு அவர்கள் மணிவண்ணனின் விவகாரத்தை கையாண்டு இருந்திருக்கக் கூடாது என்று. இதுவிடயத்தில் வெற்றியை நிதானமாக அனுபவிப்பதோடு வெற்றிக்குப் பின்னரான நிலைமைகளில் நிதானமிழக்காமல் நீண்டகால நோக்கில் மணிவண்ணனைக் கையாண்டு இருக்கவேண்டும் என்ற விமர்சனத்தை பலரும் முன்வைக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களில் இருந்து கூட்டமைப்பு கற்றுக் கொண்டது. அதோடு, கூட்டமைப்பின் தாய்க் கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி பல தசாப்தகால பாரம்பரியத்தைக் கொண்டது. இப்போதுள்ள கட்சிகளில் தனக்கென்று கீழிருந்து மேல் நோக்கிய அதேசமயம் மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்புக்களை தமிழரசுக் கட்சிதான் கொண்டிருக்கிறது.

தமிழரசுக் கட்சிக்கு தெரியும் கூட்டமைப்பின் இதயம் தானே என்று. தமிழரசுக் கட்சி என்ற அடித்தளத்தின் மீதுதான் கூட்டமைப்பு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே, அந்த அடித்தளத்தை கூட்டமைப்புக்கு உரியதாக பொதுவானதாக மாற்ற அக்கட்சி தயாரில்லை. கூட்டமைப்பைப் பதியாமல் வைத்திருப்பதற்கும் அதுதான் காரணம். கூட்டமைப்பு மட்டுமல்லாது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் பதிவில்லை.

எனவே, தமிழரசுக் கட்சியின் நீண்ட பரம்பரியம் அண்மைக்கால உட்பூசல்களில் இருந்து அவர்கள் சுதாகரித்துக்கொள்ள உதவியிருக்கிறது. அதேசமயம் மணிவண்ணன் விவகாரத்திலிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு உட்கட்சிப் பிளவுகளை வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கையாளாமல் அவர்கள் தங்களுடைய காலத்துக்காக காத்திருக்கிறார்கள்.

ஆனால், இதன் அர்த்தம் தமிழரசுக்கட்சி தனக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்களை வெற்றிகரமாகக் கையாண்டுவிடும் என்பதல்ல. அந்த பூசல்களை கையாள்வதற்கு ஒரு மாற்று அணி இல்லை என்பதே இப்போது தமிழரசுக் கட்சிக்குள்ள பெரிய பலாகும்.

கஜேந்திரகுமார், மணிவண்ணணோடு மோதிக் கொண்டிருக்கிறார். விக்னேஸ்வரன் கட்சியைக் கட்டியெழுப்ப ஆட்கள் போதாமல் தவிக்கிறார். இந்நிலையில் தமிழரசுக் கட்சியிடம் இருந்து பிரிந்து வரக்கூடியவர்களை ஒரு புதிய பெரிய அணிக்குள் திரட்ட மாற்று அணியில் உள்ள எந்தவொரு கட்சியாலும் முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் கொள்கை அடிப்படையிலோ அல்லது உத்தி அடிப்படையிலோ ஒன்றுபட முடியாத கட்சிகளை ராஜபக்ஷக்கள் ஒன்றிணைப்பார்கள் போலத் தெரிகிறது. திலீபனை நினைவு கூரும் விடயத்தில் கட்சிகள் ஐக்கியமாக அரசாங்கத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கை நேற்று ஏற்பட்டிருகிறது. இது தற்காலிகமானது என்றாலும் ஒரு நல்ல உற்சாகமூட்டும் முன்னுதாரணம்தான்.

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்