Main Menu

பாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது!

இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான இரகசியத் தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய பத்திரிகையாளர் உட்பட மூவரை டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, டெல்லியில் வசித்துவந்த சீனப் பெண் மற்றும் நேபாளப் பிரஜை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரிடமிருந்து, கைதான பத்திரிக்கையாளர் ராஜூவ் சர்மா மிகப்பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த உளவு வேலையில் ஈடுபட்டது தொடர்பான விசாரணைக்காக கடந்த 14ஆம் திகதி முதலே ராஜூவ் சர்மா டெல்லி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்.

இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வெளிநாட்டினர் இருவரும் இந்திய பாதுகாப்புத் தொடர்பான இரகசியத் தகவல்களை சீன உளவு அமைப்புக்கு அனுப்பியதை ராஜூவ் சர்மா ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவர் இன்று முறைப்படி கைதுசெய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகின்றது.

இதற்கிடையில், இந்திய பிரதமர், ஜனாதிபதி, இராணுவத் தளபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 10 ஆயிரம் இந்திய பிரமுகர்களை சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உளவு பார்ப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது. இதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்புக் குழு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...