Main Menu

தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்த மகாகவியின் பிறந்ததினம் இன்று

“வீழ்வேன் என நினைத்தாயோ” என மரணத்திற்கே சவால் விடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு இன்று பிறந்த நாள்.

தமிழ் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் பாரதியார். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று அறைகூவல் விடுத்த அவர், பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்தார்.

பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி. பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பிரகடனம் செய்த மகாகவி பாரதி, சித்தர்களைப்போல, ஞானிகளைப்போல, சிந்தித்தது மட்டுமல்லாமல் ‘சிந்துக்குத் தந்தை’ என்ற பாவேந்தரின் கூற்றுக்கிணங்க பாடிப் பாடிப் பரவசப்பட்டவா் என்பதற்கும், பாட்டாலே பலரையும் பரவசப்படுத்தியவர் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. பாரதியின் பிறந்த நாள் என்பது சம்பிரதாயமான நினைவு கூரல் அல்ல; அது மகத்தான மனிதத்துவத்தின் கொண்டாட்டம்.கவிதையின் குதூகலம். காலத்தின் தீராத ஒரு புத்தகத்தை வாசிக்கும் பேரனுபவம்.

***************************************************************

சுப்ரமணிய பாரதியார் பற்றி… :

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை’ என பிறநாட்டு நல்லறிஞர்கள் வணங்கிப் போற்றிய கவிதை பாரதியாரின் கவிதை.

தமிழகம் தந்த அந்த மகாகவி: எத்தனையோ இனிய கனவுகளைத் தம் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்தார்; அவற்றை நிறைவேற்றி வைக்கும் வரம் தருமாறு கடவுளிடம் அவ்வப்போது வேண்டினார். அங்ஙனம் கவியரசர் கண்ட கனவுகள் சிலவற்றை காண்போம்.

நுாறாண்டு வாழ வேண்டும்: நுாறு வயது வரை இன்பமாக வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாரின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தது.  “நோவு வேண்டேன், நுாறாண்டு வேண்டினேன்” என அவர் ‘விநாயகர் நான்மணி மாலை’யில் பாடினார்; “நுாறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டும்” என  மகாசக்தியிடம் வேண்டினார். நுாறு ஆண்டுகளில் எவ்வளவோ காரியங்களைச் செய்து முடிக்கலாம் என்று நம்பியிருந்தார்; நல்ல திட்டங்களும் தீட்டி வைத்திருந்தார். ஆனால், ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் இன்னொன்று நினைக்கும்’ என்னும் வாக்கு, அவரது வாழ்வில் உண்மை ஆயிற்று; முப்பத்தொன்பது வயது முடிவதற்குள் மகாகவியின் வாழ்க்கையே முடிந்து போயிற்று!

செல்வம் வேண்டும்: 
செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற கனவு பாரதியாருக்கு நிரம்ப இருந்தது.  “கனக்கும் செல்வம், நூறு வயது இவையும் தர நீ கடவாயே!” என்பது கணபதியிடம் அவர் கேட்கும் வரம். ‘விநாயகர் நான்மணி மாலை’யில் வரும் ஒரு பாடலில், “நீண்ட புகழ், வாணாள், நிறைசெல்வம், பேரழகு இவற்றை வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து” என்று விநாயகப் பெருமானிடம் வேண்டினார். ‘யோக சித்தி’ என்னும் தோத்திரப் பாடலில் “நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை நேரே இன்று எனக்குத் தருவாய்” என்று சக்தியிடம் வரம் கேட்ட போதும் பாரதியார் மறவாமல் ‘தொழில் பண்ணப் பெருநிதியம் வேண்டும்’ என்று கேட்டார்.

தலைமை ஏற்க வேண்டும்: கவிதைகளைக் குறித்துப் பற்பல கனவுத் தொழிற்சாலைகளைக் கட்டி வைத்திருந்தார் பாரதியார். அவர் ‘தீயே நிகர்த்து ஒளிவீசும் தமிழ்க் கவிதைகள்’ படைக்க வேண்டும் என விரும்பினார்; “என் நாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!” என்று விநாயகப் பெருமானிடம் வேண்டினார்; “எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராது என்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்” என்று கலைத்தமிழ் வாணியிடம் விண்ணப்பம் செய்தார். கவிதைகளைப் பொறுத்தவரையில் கவியரசருக்கு மூன்று கனவுகள் இருந்தன. முதலாவதாக, “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்று விரும்பினார் அவர்; இரண்டாவதாக, பாடும் திறம் படைத்த தமக்கு வையத் தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டார்; “அடி, உன்னைக் கோடி முறை தொழுதேன் – இனி வையத் தலைமை எனக்கு அருள்வாய்” என்று சக்தியிடம் வரம் கேட்கவும் செய்தார். மூன்றாவதாக, தம் படைப்புக்களை 40 நுால்களாகப் பிரித்து, ஒவ்வொரு நூலிலும் 10,000 படிகள் அச்சிட வேண்டும் என்றும், ‘இந் நான்கு லட்சம் நுால்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய், தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக சாதாரணமாகவும், விரைவாகவும் விலையாகிப் போகும்’ என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

தமிழன் உருவாக வேண்டும்: “சாதி இரண்டொழிய வேறில்லை” என்று திட்டவட்டமாகப் பாடினார் ஔவையார்; “சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்” என உணர்ச்சி மிக்க குரலில் முழங்கினார் சிவவாக்கியர். இவர்கள் இருவரையும் அடியொற்றிக் கவியரசரும், “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றும், “சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு தன்னில் செழித்திடும் வையம்” என்றும் பாடினார். அவர் கனவு கண்ட தமிழகத்தில் இன்று இருப்பது போல் நூற்றுக்கு மேற்பட்ட சாதிகள் இல்லை; ஒரே ஒரு சாதிதான் இருந்தது. அதற்கு அவர் வைத்திருந்த பெயர் ‘தமிழ்ச் சாதி’ – ‘மனித சாதி’ – என்பதாகும்.
சாதி ஒழிப்பைப் பொறுத்த வரையில் தம் கனவு நனவாகவில்லை, நடைமுறைக்கு வரவில்லை என்ற உண்மையை நன்கு அறிந்திருந்தார் பாரதியார். எனவே அவர், “விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?” என்று விதியிடமே மனம் நொந்து கேட்டார்; “மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகி விட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப் போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்” என்று தம் வசன கவிதை ஒன்றில் வேதனையோடு எழுதினார். கவியரசர் கனவு கண்டதெல்லாம் தமிழ் கூறு நல்லுலகில் ‘தமிழச் சாதி’ என்ற ஒன்றே இருக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ் தலைமை பெற்றிட வேண்டும்: தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திட வேண்டும் என்பது பாரதியின் விருப்பமாக இருந்தது. இவ் விருப்பத்தினைக் குறித்து அவர் எழுதியுள்ளதில் சில…

1. “தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக”.
2. “தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்”.
பாரதி கனவு கண்டபடி, இன்று தமிழ்நாட்டில் தமிழ் சிறந்து விளங்குகின்றதா? கல்வித் துறையைப் பொறுத்த வரையில் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடைபெறுகின்றனவா? நம் நாட்டை விட்டு ஆங்கிலேயர் சென்று விட்டனர்; ஆனால், நம்மை விட்டு ‘ஆங்கில மோகம்’ இன்னும் அகன்ற பாடில்லை. ‘இன்றைய நவீன திருஞானசம்பந்தர்கள்’ மூன்று வயது முதற்கொண்டே ‘ஆங்கிலப் பால்’ உண்ணத் தொடங்கி விடுகிறார்கள்! இவ் அவல நிலையைக் கருத்தில் கொண்டே, “வேறு வேறு பாஷைகள் – கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ!” என்று சாபமிடுவது போல் பாடினார் பாரதியார். பாரதி  கண்ட கனவுகள் பல இன்றும் நனவாகாமலே, நடைமுறைக்கு வராமலே  உள்ளன. கவியரசரின் கனவுகள் யாவும் நனவானால் உலக அரங்கில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.
-பேராசிரியர் இரா.மோகன் எழுத்தாளர்

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்ட சிறப்புக்கவி (11.12.2019) கவியாக்கம்……….ரஜனி அன்ரன் (B.A)

பாட்டிற்கு ஒரு புலவன்
பைந்தமிழ் பாவலன்
முண்டாசுக் கவிஞன்
முறுக்கு மீசைக்காரன்
சிந்துக்கும் தேசீயத்திற்கும்
சந்தக்கவிகள் தந்தவர்
எட்டையபுரத்தில் உதித்தாரே
மார்கழித் திங்கள் பதினொன்றிலே !

மாடனை, வேடனை, காடனை
அடக்கினார் தன் கவிக்குள்
வீட்டிற்குள் முடங்கிய பெண்களை
வேகமாய் கூவியழைத்தார்
வறுமையின் கொடுமையை
பொறுமையாய் சாடினார்
விதியையும் மதியையும்
கவிக்குள் கலக்கினார் !

தாய்த்தமிழை தாயகவிடுதலையை
தாய்நாட்டை பெண்விடுதலையை
சாதி பேதமற்ற சமுதாயத்தை
தமிழ்ச் சாட்டையால் தகர்த்தெறிந்தார்
கவிதை எனும் ஆயுதத்தால்
மக்களை வசப்படுத்தினார் !

அறியாமை இருளை அறவே போக்கினார்
அச்சத்தைப் போக்கி வீரத்தை உணர்த்தினார்
சொல் எனும் வில்லினால் சுட்டெரித்தார்
குருதி கொப்பளிக்க சுதந்திர கீதமிசைத்தார்
தமிழால் மகாகவி பெருமை பெற்றார்
மகாகவியால் தமிழே பெருமை பெற்றதுவே !

பகிரவும்...