Main Menu

தமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்

வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞராக அவர் தென்பட்டார். அவரது விடுதலைக் கவிதைகள், கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எடுத்தியம்பின.

“பாடுகின்றோர் எல்லோருங் கவிஞ ரல்லர்
பாட்டென்றாற் பண்டிதர்க்கே உரிமை யல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெழுந்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்”

என்று அவர் பாடினார். அதற்கேற்ப குமுறுகின்ற கோளரியாக விளங்கிய கவிஞன் அவர்.

நூற்றாண்டு விழாவையொட்டி பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

அதிகாரத்திற்கஞ்சி, பிழைப்புக்காய் ஆக்கப்படும் கவிதைகளெல்லாம் அழிந்தே போகும் என்று அவர் கூறியவற்றின் உணமையினை நாம் நேரிலேயே பல தடவைகள் பார்த்ததுண்டு. இவ்விதமாகக் கொள்கையின்றி விண்ணப்பப் பதிகங்கள் எழுதுவோரை ஏடுகள் கவிஞரென எழுதி வைத்தாலும் கால ஓட்டத்தில் இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும் என்பதுதான் எத்துணை உண்மையான வார்த்தைகள். பாரதியாரின் வாழ்க்கையே இதற்கொரு சிறந்ததொரு உதாரணம். இறவாத அவரது கவிதைகள் இன்றும் நிலைத்து வாழ, அவரது காலகட்டத்தில் அவரை எள்ளி நகையாடிய எத்தனைபேரை ஏடுகள் சிலாகித்திருக்கும். தூக்கிவைத்துப் புகழ்மொழி பேசியிருக்கும். இன்று அத்தகையவர்களில் பலர் காலவெள்ளத்தில் அடியுண்டு போகவில்லையா? இதுபோல்தான் இன்றைய பத்திரிகை, சஞ்சிகைகள் பலவற்றில் காணப்படும் பெயர்களில் பலவற்றை இன்னும் ஐம்பது வருடங்களில் காண முடியாது போய் விடலாம். அதே சமயம் இன்று காணமுடியாத பல பெயர்கள் , திறமை காரணமாக மீள்பரிசோதனை செய்யப்பட்டு நிலைத்து நிற்கப் போவதையும் வரலாறு பதிவு செய்யும்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வேந்தனாரின் சிறுவர் இலக்கியத்திற்கான பங்களிப்பு மகத்தானது. சோமசுந்தரப் புலவரைத் தொடர்ந்து இவரது பல சிறுவர் கவிதைகள் தமிழ்ப் பாடநூல்களில் சேர்க்கப்பட்டன. ‘நாட்டில் அன்பு’ என்னுமொரு சிறுவர் கவிதையில் வேந்தனார் பின்வருமாறு கூறுவார்:

“பொருளும் நிலமும் எவர்க்கும்
பொதுவாய் இருத்தல் வேண்டும்
அருளுந் தொண்டும் உலகை
ஆளப் பார்க்க வேண்டும்”

பொருளும் நிலமும் எவர்க்கும் பொதுவாய் இருத்தல் வேண்டும் என்னும் தனது எண்ணத்தை அவர் எத்துணை அழகாகக் குழந்தைகளுக்குக் கூறுகின்றார் பாருங்கள்! பொதுவுடமைத் தத்துவத்தினை இதனைவிட எளிமையாகக் குழந்தைகளுக்குப் புரியும்படி கூற முடியுமா?

இரசிகமணி கனகசெந்திநாதன் வேந்தனாரின் கவிதைகளில் குறிப்பாகச் சிறுவர் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்தவர். வேந்தனாரின் கவிதைகளைப் பற்றி, சிறுவர் கவிதைகளைப் பற்றி ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ (தினகரன்), ‘பாட்டி எங்கள் பாட்டி’ (ஈழநாடு), ‘பாலைக் காய்ச்சிச் சீனிபோட்ட பாவலன்’ மற்றும் ‘வித்துவான் வேந்தனார்’ (ஈழகேசரியில் வெளிவந்த ஈழத்துப் பேனா மன்னர்கள் தொடரில்) எனக் கட்டுரைகள் பல எழுதியவர். சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதெல்லாம் அவற்றைப் பற்றிச் சிலாகித்துப் பேசியவர்.

வேந்தனாரது குழந்தைக் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு சிறப்பு சக உயிர்களிடத்தில் அவர் காட்டும் அன்பு. பரிவு. ‘மான்’ என்னும் கவிதையில் மான்களை வேட்டையாடும் மானிடர்களின் செயலை

‘குட்டியோடு மான்கள்
கூடித் திரியும் போது
சுட்டு வீழ்த்த லாமோ
துன்பஞ் செய்ய லாமோ’ எனச் சாடுவார். மான்களை

‘துனபப் படுத்தி டாமல்
தோழ ராகக் கொள்வோம்’ என்பார். இவ்விதமே ‘அணில்’ கவிதையிலும்

‘கூட்டில் அணிலைப் பூட்டி – வைத்தல்
கொடுமை கொடுமை யடா
காட்டில் மரத்தில் அணில்கள் – வாழும்
காட்சி இனிய தடா’ என்றும்,

‘துள்ளும் அணிலின் கூட்டம் – எங்கள்
சொந்தத் தோழ ரெடா’ என்றும் பாடுவார்.

‘கூண்டிற் கிளி’ என்னும் கவிதையில் பவளம் என்னும் சிறுமி கூண்டில் கிளியை அடைத்து வைத்திருக்கின்றாள். கூண்டில் அடைத்து வைப்பதன் மூலம் அக்கிளியைப் பூனையிடமிருந்து காப்பதாகவும், அதற்கு உணவுகள் தருவதாகவும் எண்ணுகின்றாள். அவளைப் பார்த்துக் அந்தக் கிளியானது கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாழும் தன் அடிமை வாழ்வினை விளக்குகின்றது. இறுதியில் உண்மையினைப் புரிந்து கொண்ட பவளம் அக்கிளியைப் பார்த்து

‘நல்ல மொழிகள் கூறியே
நாண வைத்தாய் என்னைநீ
செல்வக் கிளியென் தோழியே
சிறையை நீக்கி விடுகின்றேன்.

கூட்டில் உங்கள் குலத்தினைக்
கொண்ட டைத்தல் கொடியது
காட்டில் வானிற் பறந்துநீர்
காணும் இன்பம் பெரியது.’

என்று கூறியவாறு

‘பவளம் கூட்டைத் திறந்தனள்
பச்சைக் கிளியும் பறந்தது
அவளும் வானைப் பார்த்தனள்
அன்புக் குரலுங் கேட்டது’

இவ்விதமாக குழந்தைப் பாடல்களில் சக உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலை வலியுறுத்தும் வேந்தனார் பெரியவர்களுக்காக எழுதிய கவிதைகளிலும் இவ்விதமே தன் எண்ணங்களைப் பாரதியைப் போல் வெளிப்படுத்துவார். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளிலொன்று தெய்வங்களுக்குப் பலி கொடுப்பது. அதனைப் பற்றியதொரு கவிதை ‘உலகம் எங்கள் தாயகம்’. அதில் அக்கொடுஞ் செயலினை

‘ ஆட்டை அன்புக் கோவில்முன்
அறுக்கும் கொடுமை அகற்றுவோம்
நாட்டில் இந்தக் கொடுமையோ
நாங்கள் காட்டு மறவரோ.’ என்று சீற்றத்துடன் கண்டிக்கும் கவிஞர் நாட்டில் நிலவும் தீண்டாமைக் கொடுமையினையும் கண்டிப்பார்

‘பாழுஞ் சாதிப் பகுப்பெலாம்
பட்ட தென்று பாடுங்கள்’ என்று.

வேந்தனாரின் இளம் பருவம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் அடிமைகளாக இருந்த காலகட்டம். அன்றைய சூழலில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை ஆதரித்து பாரதியைப் போல் வேந்தனாரும் கவிதைகளை யாத்தார். அதே வேந்தனார் பின்னர் தமிழின், தமிழரின் இன்றைய நிலையினை எண்ணிப் பொருமினார். இவற்றிற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றியெல்லாம் அவர் நெஞ்சு தொடுத்த வினாக்களையும், அவற்றிற்கான அவரது விடைகளையும் புலப்படுத்தும் வகையிலுள்ளன அவரது கவிதைகள் குறிப்பாகக் காவியங்கள்.

தமிழரின் இன்றைய தாழ்ந்த நிலைக்குக் காரணங்கள் எவையாகவிருக்கும்? அவரது கவிதைகளினூடு அவற்றைக் காண்போம். தமிழரின் தாழ்ந்த நிலைக்கு முக்கியமான காரணங்களிலிரண்டு சாதிப் பாகுபாடும், சமயப் பிரிவுகளும். இதனையே அவரது ‘வீரர் முரசு’ கவிதையில் வரும் பின்வரும் வரிகள் புலப்படுத்தும்:

‘ ஆளு கின்ற எம்மை யின்றும்
அடிமை யாக வைத்திடும்
தாழு கின்ற சாதி சமயச்
சண்டைக் கான மெரியவே
மூளு கின்ற சுதந்தி ரத்தீ
முனைந்தெ ழுந்த துடிப்பினாற்
சூழு கின்றோம் தமிழ ரென்று
சொல்லி முரசைக் கொட்டுவோம்’

மேற்படி விழாவில் வேந்தனாரின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ‘தன்னேர் இல்லாத தமிழ்’ என்னும அவரது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி, ‘கவிதைப் பூம்பொழில்’ என்னும் அவரது கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி, மேலும் மேற்படி ‘கவிதைப் பூம்பொழில்’ தொகுதியிலுள்ள குழந்தைப் பாடல்களை மட்டும் தொகுத்து அழகான வர்ண ஓவியங்களுடன் வெளியான ‘குழந்தை மொழி’ என்னும் குழந்தைக் கவிதைத் தொகுதி. மேற்படி மூன்று தொகுதிகளையும் வாங்குவோருக்கு இலவசமாக ‘வித்துவான் வேந்தனார்’ என்னும் அவரைப் பற்றி, அவரது மறைவையொட்டிப் பிறர் எழுதிய அனுதாபச் செய்திகள், கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி வழங்கப்பட்டது. ‘வியத்தகு குழந்தைப் பாடல்கள் பாடிய வேந்தனார்’ என்னும் தனது கட்டுரையில் இரசிகமணி கனக் செந்திநாதன் பின்வருமாறு கூடி முடித்திருப்பார்: ” அவரது குழந்தைப் பாடல்கள் தனிநூலாக அழகான படங்களுடன் பெரிய அளவில் இரண்டாம் பதிப்பாக வெளிவந்து ஈழத்துக் குழந்தைகளின் நாவை இனிக்கச் செய்தல் வேண்டும் என்பது எனது அவா’ என்ற அவரது அவாவினை வித்துவான் வேந்தனாரின் குடும்பத்தினரின் உதவியுடன் எழுத்தாளர் எஸ்.பொ.வின்’மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ்’ (தமிழகம்) பதிப்பகத்தினர் நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இக்கட்டுரை வேந்தனாரின் படைப்புகள் பற்றியதொரு விரிவான கட்டுரையல்ல. மேற்படி நிகழ்வில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய விரிவான விமர்சனப் பார்வையுமல்ல. மேற்படி நிகழ்வு பற்றிய செய்தி, என் சிந்தையில் ஏற்படுத்திய எண்ண அதிர்வுகளே. ஒன்று மட்டும் உண்மை. பாரதியைப் போல், புதுமைப் பித்தனைப் போல் வேந்தனாரின் வாழ்வு குறுகியதாக அமைந்த போதிலும், அக்குறுகிய காலகட்டத்தில் அவர் சாதித்தவை அளப்பரியன. அவரது படைப்புகள் மேலும் பல மீள்பதிப்புகளாக, புத்தம் புதிய பதிப்புகளாக வெளிவர வேண்டும். இலக்கியமென்ற பெயரில் குப்பைகளையெல்லாம் நூற்றுக் கணக்கில் வெளியிடும் பதிப்பகங்கள், வேந்தனார் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் நூலுருவாக்க வேண்டும். இத்தகைய படைப்பாளிகளின் படைப்புகளையெல்லாம் அவரவர் குடும்பத்தவரே வெளியிட வேண்டுமென்ற நிலை எதிர்காலத்திலாவது மாற வேண்டும். இந்த விடயத்தில் தமிழகம் ஈழத்தமிழர்களை விட ஒருபடி மேல்.

வேந்தனாரின் புகழ்பெற்ற குழந்தைப் பாடலான ‘அம்மாவின் அன்பு’ என்னும் தலைப்பில் வெளியான ‘காலைத் தூக்கிக் கண்ணிலொற்றி.. ‘ பாடலின் முழு வடிவமும் கீழே:

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.

புழுதி துடைத்து நீரும் ஆட்டிப்
பூவுஞ் சூட்டும் அம்மா
அழுது விழுந்த போதும் என்னை
அணைத்துத் தாங்கும் அம்மா.

அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி
அழிவு செய்த போதும்
பிள்ளைக் குணத்தில் செய்தான் என்று
பொறுத்துக் கொள்ளும் அம்மா.

பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்த
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி
தோளிற் போடும் அம்மா.

பாப்பா மலர்ப் பாட்டை நானும்
பாடி ஆடும் போது
வாப்பா இங்கே வாடா என்று
வாரித் தூக்கும் அம்மா.

வ.ந.கிரிதரன் – பதிவுகள் 2010

 

 

 

 

“ வித்துவான் வேந்தனார் “ (05.11.1918 – 05.11.2018) நூற்றாண்டு விழாவிற்கான சிறப்புக்கவி)
கவியாக்கம்…TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர் …..ரஜனி அன்ரன்..(B.A) 05.11.2018

வேலணை மண்ணிற்கு பெருமை சேர்த்த
வித்துவான் வேந்தனாரின் எல்லையில்லாத்
தமிழ் ஆர்வமும் தமிழ்ப்பற்றும்
தமிழ் அறிஞனாய் தமிழ் ஆசானாய்
கவிஞனாய் பேச்சாளனாய் வலம்வந்து
தமிழுக்கு இலக்கியப் படையல்கள் தந்து
தமிழ்க்கடலாய் பரந்து விரிந்ததே!

வேலணை மண்ணில்
கார்த்திகைத் திங்கள் ஐந்தில்
பார் புகழப் பிறந்தாரே வேந்தனாரும்
பெருமை பெற்றதே எம் மண்ணும்
நூற்றாண்டு விழாக் காணும் இவ்வேளை
வாழ்த்துவோமே எம் வேந்தனாரை !

பத்துப்பாட்டு முதல் பாரதியார் பாடல்வரை
பற்பல ஆய்வுகள் செய்து
ஆராட்சிக் கட்டுரைகள் எழுதி
ஈழத்து தமிழ் இலக்கிய உலகில்
சிறுவர் இலக்கியத்திற்கான
வேந்தனாரின் பங்களிப்பு அளப்பரியதே !

சிறுவர்களுக்காகவே பாடி வைத்தார் பாடல்களை
காலைத் தூக்கி கண்ணில் ஒற்றி
கட்டிக் கொஞ்சும் அம்மா என்ற பாடலை
யாராலுமே மறக்க முடியாதே
சிறுவயதில் நாம் பாடி மகிழ்ந்த பாடல்
இன்னும் எத்தனையோ சிறுவர் பாடல்களை
ஆக்கினாரே எம் வித்துவான் வேந்தனார் !

பாரதியாரின் வழியில் தானும்
சிறுவர் பாடல்களையும்
விடுதலைப் பாடல்களையும்
முற்போக்குச் சிந்தனைகளோடும்
பொதுவுடமைக் கருத்துக்களோடும்
பாடி வைத்தாரே வேந்தனாரும் !

அந்நியர் ஆட்சிக் காலமதில்
வாழ்ந்த வேந்தனாரின் மனமும்
விடுதலையை நாடி ஏங்கியதே
பாரதியாரைப் போலவே
பாங்கான கவிகளை எல்லாம்
பாடி வைத்தாரே கச்சிதமாக !

தமிழரின் எதிர்கால நிலையை
நினைத்து நொந்து ஏங்கினார்
சாதிப்பாகுபாடும் சமயப் பிரிவுகளும்
தமிழரின் தாழ்விற்கு
துணை போய்விடுமே என அஞ்சினார்
தமிழர் என்று சொல்லி
முரசு கொட்டுவோம் என பாடினார் உரக்க !

குறுகிய காலமே வாழ்ந்த
வேந்தனாரின் வாழ்வுப் பயணம்
தமிழோடு நிறைந்தே இருந்தது
தமிழோடு வாழ்ந்து தமிழோடு மறைந்து
நூற்றாண்டு விழாக் காணும் வேந்தனாரை
என் மண்ணின் மைந்தரை
மனமார வாழ்த்துவோமே இன்று !

 

 

 

 

வித்துவான் க. வேந்தனார் (நவம்பர் 5, 1918 – செப்டம்பர் 18, 1966) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மரபுவழித் தமிழ்ப் புலமையாளர்களுள் ஒருவர். இவர் சிறந்த தமிழறிஞராய், தமிழ்ப் பற்றாளனாய், ஆசிரியராய், கவிஞராய், சொற்பொழிவாளராய் வாழ்ந்தவர். பத்துப்பாட்டு முதல் பாரதியார் பாடல்கள் வரை ஆராய்ந்து தெளிந்த கட்டுரைகள் எழுதியவர்.

வேந்தனார் யாழ்ப்பாணத்து வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கனகசபைப்பிள்ளை, தையல்முத்து அம்மையார் ஆகியோருக்குத் தனியொரு குழந்தையாகப் பிறந்தார். ஆசிரியரான சோ. இளமுருகனாரின் வழிகாட்டலால் பதினாறாவது வயதில் நாகேந்திரம்பிள்ளை எனத் தனது பெற்றோர் சூட்டிய பெயரினை வேந்தனார் எனச் சுத்தமான தமிழ்ப் பெயராக மாற்றிக் கொண்டார்.

இளமையில் பயில்கின்ற பொழுதே இந்துசாதனம், ஈழகேசரி போன்ற இதழ்களில் இலக்கிய, சமய கட்டுரைகளை வரைந்ததோடு பின்பு வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சுதந்திரன் ஆகிய ஏடுகளில் ஆய்வு கட்டுரைகள் வழங்கியிருந்தார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் ஆசிரியராக பயிற்சியினைத் தொடர்ந்த காலங்களில் இவர் சந்திக்க நேர்ந்த பரமேசுவராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி கு. சிவப்பிரகாசம், சி. சிதம்பரப்பிள்ளை, பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதி போன்றோரின் தொடர்புகளும் இவரின் தமிழ் மொழி வளம் பெற உதவியது. வேந்தனார் வித்துவான் சோதனைக்குத் தோற்றுவதற்காக தமிழ்நாடு சென்றிருந்த வேளை தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளுடன் சில காலம் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அவரிடமிருந்து ஆழ்ந்த தமிழ் பற்றே பிற்காலங்களில் தன் குழந்தைகளுக்கு கலையரசி, இளங்கோ, தமிழரசி, இளஞ்சேய், இளவேள் எனத் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கத் தூண்டின.

சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் முதலான தமிழ் இலக்கியத்தில் இவருக்கிருந்த தேர்ச்சி காரணமாக பண்டித வகுப்புக்களுக்கும் பிற வகுப்புக்களுக்கும் மேற்படி நூல்களைப் படிப்பிக்கும் பொறுப்பை வித்துவானிடமே புலமையாளர்கள் ஒப்படைத்திருந்தனர். அவரின் பாடம் சொல்லும் ஆற்றலின் ஒரு முகத்தினை கம்பராமாயண அயோத்தியா காண்டத்து மந்தரை சூழ்ச்சிப்படலம், கைகேயி சூழ்வினைப் படலம் என்பவற்றிற்கு அவர் எழுதிய உரைவாயிலாக இன்றும் காணமுடியும். நீண்ட காலக் கற்பித்தல் அனுபவத்துடன் எழுதப்பட்ட இப் பாடநூல் இன்றும் மாணவர்களால் படிக்கப்பட்டு வருகின்றது.

எழுத்தாளராக
வேந்தனார் சிறந்த எழுத்தாளராகவும் மேடைப் பேச்சாளராகவும் இருந்துள்ளார். எழுத்தாளர் என்ற வகையில் பல இலக்கியக் கட்டுரைகளை வேந்தனார் சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவ்வப்போது எழுதி வந்துள்ளார்.

கவிஞராக
வித்துவான் சிறந்த கவிஞராகவும் தமிழ் உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். அவ்வப்போது இவர் எழுதிய கவிதைகள் ஈழநாடு முதலான பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதுடன் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகி வந்துள்ளன. அப்பாடல்களுள் சிலவற்றைத் தொகுத்து ‘கவிதைப் பூம்பொழில்’ என்னும் பெயருடன் ஸ்ரீ லங்கா புத்தகசாலை 1964 ஆம் ஆண்டு வெளியிட்டது. அத்தொகுப்புக்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிளை, சோ. இளமுருகனார் ஆகியோர் சிறப்புப் பாயிரம் நல்கியிருந்தனர்.

வேந்தனாரின் சிறுவர்களுக்கான கவிதைகள் சுட்டிக்காட்டத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். அவரின்,

“காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொள்ளும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா”
எனும் சிறுவர்க்காக எழுதிய பாடல் இன்றும் சிறுவர்களால் பாடப்பட்டு வருகிறது.

பட்டங்கள்
மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டத்தையும் சைவசித்தாந்த சமாசத்தில் சைவப் புலவர் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தைப் பெற்றவர் வேந்தனார். வாழுங் காலத்திலேயே திருவாவடுதுறை ஆதீனத்தாரால் ‘தமிழன்பர்’ என்ற பட்டமும் (1947), ஸ்ரீலங்கா சைவாதீனத்தினரால் ‘சித்தாந்த சிரோமணி’ (1964) என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்.

வேந்தனாரின் நூல்கள்
இந்து சமயம் (பாட நூல்)
திருநல்லூர்த் திருப்பள்ளி எழுச்சியும் குயிற்பத்தும் (1961)
கவிதைப் பூம்பொழில் (1964, 2010)
குழந்தை மொழி” (சிறுவர் பாடல்கள், 2010),
தன்னேர் இலாத தமிழ்” (கட்டுரைத் தொகுப்பு, 2010)

 

 

 

 

வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் 05.11.18. அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  வித்துவான் வேந்தனாரை அறிஞர்கள் பலர், பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில், விதந்து பேசியும் எழுதியும்  வந்துள்ளனர். தலைசிறந்த உரையாசிரியர், நனி சிறந்த கட்டுரையாளர், மிகச் சிறந்த குழந்தைப் பாடலாசிரியர், ஆற்றல் மிகுந்த கவிஞர், பேராண்மைமிக்க சொற்பொழிவாளர், தனித்தமிழ்ப் பற்றுமிக்க தமிழ்ப் பேரன்பர்,  சைவ சித்தாந்த தத்துவங்களை நன்கறிந்த சித்தாந்த சிரோமணி என பல துறைகளில் சிறப்புற்றிருந்த வேந்தனார் அவர்கள், மாணவர் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பெரும் தமிழாசானுமாவார். வேந்தனாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, வேந்தனாரின் உரையாசிரியத் தன்மையின் சிறப்பினை விதந்து போற்றி, அவரின் மாணவரும்,  நீண்டகாலம் வேந்தனாரை அறிந்தவருமான இளவாலை புலவர் அமுது  அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரையிது –


ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார் தான். வேந்தனார் ஒரு பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்றாலும் அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார்! வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடுகொடுக்க இயலாமற் போய்விட்டனர். பல்லாயிரம் தமிழ் மாணவர் வேந்தனாரின் உரைச்சிறப்பை அறிந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் உயர்ச்சியும் பெற அவர் வழிவகுத்தார் எனலாம். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.

இலக்கியம் என்பது ஒரு பசு மாடு. அதிலே பழக்கமில்லாதவர்கள் பால் கறக்கமுடியாது! கண்டவர்களும் மடியில் கைவைத்தால் அது காலால் அடிக்கும், கொம்பால் குதறும் என்று அஞ்சினார்கள் சிலர். இலக்கியம் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களுடைய முதுசம் பண்டித பரம்பரையின் சீதனம். அந்தத்துறையை கரையிலே நின்று பார்க்கலாமேயன்றி உள்ளே கால்வைப்பது ஆபத்தானது என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். இலக்கியம் என்பது இலக்கணத்தில் ஊறிக்கிடக்கும் ஊறுகாய். ஆழ்ந்த  அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களே அதை எடுத்து வாயில் போடலாம் என்று சிந்தித்தவர்களும் இருந்தார்கள். தேள், கொடுக்கான், சிலந்தி விடச் செந்துக்களைப்போல இலக்கியம் பாமரர்களை ஒற்றை விரல் காட்டி அச்சுறுத்தியது. கற்கக் கசடறக் கற்பவை… எனத் தொடங்கவே நாக்குத் தெறிக்கும் குறள் வரிகள், அதில் வரும் இன்னிசை அளபெடை. சொல்லிசை அளபெடை அதற்குப் பரிமேலழகர், “எவன் என்னும் வினாத்தொகை என் என்றாய் ஈண்டு இன்மை குறித்து நின்றது” என்றவாறான உரைகளும் ஊமாண்டி காட்டின. கம்பராமாயணம், திருக்குறள், கந்தப்புராணம் என்ற இலக்கிய நூல்களைப் பிஞ்சு உள்ளங்களில் இனிய ஒட்டு மாங்கனிபோல சுவை தெரிய அறிமுகம் செய்து வைத்தார் வித்துவான் வேந்தனார். அவருடைய உரையை நினைந்து கைதட்டியவர்களின் ஓசை, இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வித்துவான் வேந்தனார், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேலணை, பிறநாட்டுக் கலாசாரம், பிறமொழிக் கலப்பு, பண்பாடு என்பவற்றால் பழுதடையாத மண். எனவே அவருடைய அத்திவாரம் சிறந்த நாற்றுமேடை எனலாம். வித்துவான் அவர்கள் பரமேஸ்வராக்கல்லூரி இயற்றமிழ் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவர.; நாவலர் பாடசாலையில் பண்டித வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தவர். இவனும் அவரிடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் பாடம் கேட்க வாய்ப்புப் பெற்றவர்களில் ஒருவன்.

ஒருநாள் “ஐயா! நீங்கள் யாரிடத்திலே இலக்கணம் கற்றுக் கொண்டீர்கள்?” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே! வித்துவான் வேந்தனாருடைய ஞாபக சக்தி அபாரமானது. ஒருமுறை வாசித்துவிட்டு அப்பகுதியைப் பாராமல் சொல்லக்கூடிய ஆற்றலைக் கண்ட மாணவர்கள் வியப்புற்றோம்.

ஒருமுறை காவலூர் புளியங்கூடலில் ஒரு அரசியல் கட்சியின் மாபெரும் கூட்டம் நடந்தது. பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அது தமிழ் அரசுக் கட்சியின் தீவுப்பகுதி பாராளுமன்றத் தேர்வுக்காக நின்ற அமரர் வீ. ஏ. கந்தையா அவர்களை ஆதரித்து நடந்த இறுதிக்கூட்டம.; தந்தை செல்வா அவர்களும் அங்கு இருந்தார். மேடையில் எனது அருகில் வித்துவான் வேந்தனார் இருந்தார். தீவுப்பகுதியைச் சேர்ந்தவரும், வணிகத்துறையில் மதிப்பார்ந்தவரும், முன்னாள் தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரும், என் பிரிய நண்பருமான அல்பிரெட் தம்பிஐயா அவர்களை எதிர்த்த கூட்டம் அது. என்னை முதலில் பேசுமாறு அழைத்தார்கள். நான் நகைச்சுவையாகப் பேசினேன். “நானும் என் நண்பன் ஒருவனும் கனகராயன் குளத்தில் எங்களுக்கு இருந்த நெல் வயலைப் பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்றோம். வேலையாள் சுப்பனையும் எங்களோடு கூட்டிக் கொன்டு சென்றோம். பஸ் கனகராயன் குளத்தில் நின்றதும், பழைய கண்டி வீதி  அருகே சென்றோம். வீதி ஒரமாகப் பெரிய வாய்க்கால் போகிறது. மழை காலம் ஆகையால் வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. என்  நண்பன் வாய்க்காலைப் பார்த்துவிட்டு “அட சுப்பா! அங்கே பார்! வெள்ளத்திலே ஆட்டுக்கிடாய் ஒன்று போகிறது. ஓடிப்போய் கட்டிப்பிடித்து அதைக் கொண்டுவா!” என்றார். சுப்பன் ஒரே பாய்ச்சலில் சென்று கிடாயைக் கட்டிப் பிடித்தான்! மாலை நேரம். பொழுது கருகிவிட்டது. எங்களிடமிருந்த ‘ரோச் லைற்’ வெளிச்சமும் மங்கலாய் இருந்தது. சுப்பன் ஆட்டுக்கிடாயுடன் மல்லுக் கட்ட நேர்ந்தது. ஒருமுறை கிடாய் மேலே வந்தது. அடுத்தகணம் சுப்பன் மேலே வந்தான்.  கிடாய்க்கும் சுப்பனுக்கும் சீவமரணப் போராட்டம். என் நண்பனுக்கு விடயம் விளங்கிவிட்டது. “அடே! அது கரடியடா! கையை விட்டிட்டு வாடா!” என்று நண்பன் கத்தினான். “தம்பிஐயா அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சி என்ற கரடியைக் கட்டிப் பிடித்தார். இப்போது அது அவரை விடுகுதில்லையே” என்று முடித்தேன். சில நிமிட நேரம் ஒரே கைதட்டு. தந்தை செல்வாவே எழுந்து நின்று சபையை அமைதி பெறச் செய்தார். பேச்சு நிறைவுற்று என் கதிரையில் வந்து அமர்ந்தேன். “சபையை நன்றாகக் கவர்ந்துவிட்டீர்களே! நல்ல பேச்சு” என்று வித்துவான் பாராட்டியதும், என் இருதயத்தின் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்தன.

என்னை அடுத்து வித்துவான் வேந்தனார் உரையாற்றினார். புறநானூற்றுப் பாடல் ஒன்றைத் தூக்கி நிறுத்தினார். பெரும் பாணாற்றுப் படையிலும் ஒரு நிகழ்ச்சி வந்து கலந்தது. திருக்குறள் சில தலைகாட்டின. திருமுருகாற்றுப் படையுடன் கம்பராமாயணமும் சுரந்தன. இலக்கியநயம் பொருந்திய அருமையான பேச்சு. “கற்றோர் உச்சியில் வைத்து மெச்சக்கூடிய அருமையான பேச்சு, அருமையான பேச்சு” என அடியேன் என் குருவை ஆராதித்தேன்.

ஒருநாள் பண்டித வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, வித்துவ சிரோமணி சுப்பையாபிள்ளை வந்து குறுக்கிட்டு, சோமசுந்தரப்புலவர் காலமான செய்தியைச் சொன்னார். வித்துவான் வேந்தனார் வகுப்பை நிறுத்தி, “நான் சில பாடல்களை எழுத விரும்புகிறேன். நீங்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட பகுதியை வாசியுங்கள்” என்று கூறிவிட்டு கவிதைகளை எழுத ஆரம்பித்தார.; அடியேனுக்கும் மறைந்த புலவரில் இருந்த பெருமதிப்புக் கிள்ளத் தொடங்கியது. ஒரு சில எண் சீர்விருத்தப் பாடல்களை எழுதினேன். அடுத்த வாரம், ஞாயிறு தினகரன் மலரில் முதலாம் பக்கத்தில் என் கவிதைகள் வெளிவந்தன. வித்துவான் வேந்தனாரின் கவிதைகளும் அழகாக வெளிவந்திருந்தன. எனது கவிதைகளை வாசித்துவிட்டு வித்துவான் வகுப்பிலே என்னைப் பாராட்டியது வசிட்டர் வாயால் பெற்ற வாழ்த்துப்போல என்னை இன்ப வெள்ளத்தில் தோய்த்து எடுத்தது.

கிட்டத்தட்ட ஒருமாத காலத்தில் எனது தாயார் இறைவனடி எய்தினார். எங்கள் கவிதை நெஞ்சின் உறவால் எனது அன்னையின் நினைவு அஞ்சலி நூலுக்குச் சில கவிதைகள் எழுதித் தருமாறு கேட்டேன். பேனை எடுத்தார் கவிதை மடை திறந்தது.

அன்பால் அறிவால் உளம் உருகும் அமுத மொழியால் அனைவரையும்
தன்பால் இழுக்கும் தண்ணளியாள் தாயார் சேதுப் பிள்ளை யெனும்….
என்று சில கவிதை மணிகளை யாத்துக் கையில் தந்தார். 

வித்துவான் வேந்தனாரின் கவிதை ஆற்றலை, சொல் வளத்தை, இலக்கண அமைதியை அன்பின் ஊற்றைக் கண்டு பிரமித்தேன். பேராசிரியர் வித்தியானந்தனின் அஞ்சலிச் செய்தியை அடுத்து, வித்துவான் வேந்தனாரின் இரங்கற் பாக்கள் இடம்பெற்றன. வித்துவான் வேந்தனாரின் புலமைக்குச் சான்றாகப் பல கவிதைகளைக் காணலாம்.

தமிழர் காலம் காலமாக நினைவு கூருமாறு ஒரு பாடலுண்டு. அது அம்மாவைப் பற்றி எழுதப் பெற்றது.

காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா—-

பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து
துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா…

இப்பாடல்களில் தாய்ப் பாசம் பொங்கி நுரை தள்ளுகிறது. இலக்கிய வளத்திலும், இலக்கண அறிவிலும், சமயப் புலமையிலும், கவிதைச் செல்வத்திலும் வித்துவான் வேந்தனார் செழிப்புற்று இருந்தாலும், உரையாசிரியர் என்ற முத்திரையே அவரை உயர்த்திக் காட்டுகிறது.

  • இளவாலை புலவர் அமுது  அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரை

 

 

 

 

வித்துவான் வேந்தனாரின் நூறாவது பிறந்த நாளை(5.11.18) முன்னிட்டு அவரது ‘கவிஞன்’ என்ற தலைப்பிலான கவிதைiயும்இ 65 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு இன்றும் எம்மவர்க்கு வேண்டப்பட்டதாக உள்ள பாடல்களில் சிலவற்றையும் இங்கு தருகின்றோம்.

‘கவிஞன்’

பாடுகின்றோர் எல்லோரும் கவிஞரல்லர்
பாட்டென்றால் பண்டிதர்க்கே உரிமையல்ல
ஓடுகின்ற பெருவெள்ளப் பெருக்கே போல
உணர்ச்சியிலே ஊற்றெடுத்த ஒளியால் ஓங்கி
வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்குமாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞனாவான்.

பஞ்சணையில் வீற்றிருந்து பனுவல் பார்த்து
பாடுகின்ற கவிதைகளும் பாராள் வேந்தர்க்
கஞ்சியவர் ஆணைவழி அடங்கி நின்றே
ஆக்குகின்ற கவிதைகளும் அழிந்துபோகும்
கஞ்சியின்றி கந்தை சுற்றி வாழ்வானேனுங்
கனல்வீசி எரிமலைத்தீக் கக்கல்போல
விஞ்சுகின்ற சிந்தனையால் விழுங்கப்பட்டு
விருந்தளிக்கும் விறலோனே கவிஞனாவான்.

கற்கண்டே செழுந்தேனே கனியேயென்று
கலகலப்பாய் சுவைப் பெயர்கள் கலந்து நல்;ல
சொற்கொண்டு சொல்கின்ற கவிதையெல்லாஞ்
சொன்னவர்க்குந் தெரியாமல் தொலைந்து போகும்
விற்கொண்டு விடும் வீரன் அம்பு போல
விசை கூடும் அறிவுப்போர் வீறு தாங்கித்
தற்கொண்ட புலமைவெறிச் சொல்லாற் சான்றோன்
சாற்றுகின்ற கவிதையென்றுஞ் சாதலில்லை.

அம்மானை திருப்பள்ளி எழுச்சி கோவை
அந்தாதி கலம்பகங்கள் பார்த்துப் பார்த்து
விம்மாமற் பொருமாமற் கண்ணீர் விட்டு
விலைக்கு மாரடிக்கின்ற மெல்லியர் போல்
சும்மாயோர் உணர்வின்றிச் சொற்கள் சேர்த்துச்
சொன்மாலை தொடுக்கின்றோர் கவிஞரல்லர்
தன்மானத் துள்ளொளியால் உலகை ஓம்புந்
தனியாற்றல் தாங்கி நிற்போர் கவிஞராவார்.

பாட்டிற்கோர் புலவனென்றே தமிழ்நாடெங்கும்
பாராட்டும் பாரதியின் கவிதை ஆற்றல்
நாட்டிற்காம் விடுதலைப்போர் வெறியை ஊட்டி
நற்றமிழ்க்கும் மறுமலர்ச்சி நல்கக் கண்டோம்
வீட்டிற்குள் வீற்றிருந்தே கொள்கையின்றி
விண்ணப்பப் பதிகங்கள் விளம்புவோரை
ஏட்டிற்குள் கவிஞரென எழுதினாலும்
இறவாத கவிஞரையே உலகம் ஏற்கும்

இது வித்துவான் வேந்தனாரிற்கும் மிகவும் பொருந்தும் என்பதே தமிழறிஞர் பலரின் கருத்து.

வித்துவான் வேந்தனார் தமிழனின் அன்றைய அடிமை நிலையைக் கண்டு வெகுண்டு, தமிழன் விடுதலைக்காகப் பாடிய பாடல்கள் சொல்லுந்தரமன்று. 1948-55 காலப்பகுதியில் அவரால் இயற்றப்பட்ட பாடல்களை இன்று படிக்கும் போதும், எல்லா உரிமைகளும் இழந்து நிர்க்;கதியாய் நிற்கின்ற இந்நிலையில் எமக்கு எவ்வளவு வேண்டப்பட்டதாக இருக்கின்றது என்பதை இப்பாடல்களைப் படிப்போர் உணர்வர்.

வித்துவான் வேந்தனாரின் ‘கவிதைப் பூம்பொழில்’ நூலிலே இறுதியில் ‘அவனும் அவளும்’ என்ற தலைப்பிலே 93 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் யாவும் தமிழ் -தமிழர் உரிமை -தமிழர் விடுதலை என்ற கோட்பாட்டிலேயே மிக்க உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

தாழ்வுற்ற தமிழனின் நிலையை 1950 களில் கண்டு மனம் நொந்து பாடிய பாடல்களில் சில.

கங்கையைக் கொண்டாரென்றும்
கடாரத்தை வென்றார் என்றும்
இங்கு நாம் பழமை பேசி
எடுத்திடும் பயனொன் றில்லை
அங்கையோடங்கை கூப்பி
அடிமை செய் கூலியாக
எங்கும் போய் தமிழர் வாழும்
இழிவினைப் போக்க வேண்டும்.

இமயத்தில் கொடியை நாட்டி
இவ்வுலகாண்டோம் என்று
சுமையினைத் தூக்குங் கூலி
சொல்வதாற் பெருமை உண்டோ
நமையொத்த அடிமைச் சாதி
நானிலத் தெங்கு மில்லை
சமயப் போர் சாதிப் போரால்
தமிழர்கள் தாழ்ந்து விட்டோம்

உலகினைத் தமிழர் ஆண்ட
உரை மிக்க பழையதொன்றாய்
புலவர்கள் பாடலாகப்
போயது புதுமை இல்லை
நிலமிசை உரிமை ஆட்சி
நீங்கிட அடிமை ஆகித்
தலைமுறை பலவாய்த் தாழ்ந்தேன்
தமிழர்கள் வாழ்கின்றார்கள்.

ஆரெமை ஆண்டாலென்ன
அவரவர்க் கேற்றதாகக்
காரியம் புரிந்து வாழ்ந்து
காலத்தைக் கழிப்போம் என்னும்
ஓரினம் தமிழர் போல
உலகத்தில் எங்கும் இல்லை
காரிகை இதற்கு நீயே
காரணம் கழற வேண்டும்.

வழி வழி தமிழர் என்றும்
வாழ்ந்தவர் பிறர்க்காய் என்ற
மொழி தனைப் படைத்ததோடு
முடிந்தது தமிழர் ஆட்சி
விழி வழிக் கண்ணீர் வீழ
வெம்பிடும் பிறரைக் காத்தே
அழிவுறும் தமிழர் முன்போல்
ஆளுதல் எந்த நாளோ

ஊரெல்லாம் எங்கள் ஊரே
உறவினர் உலக மாந்தர்
ஆரெமக் கின்னல் செய்வார்
அறத்தினை காப்போம் என்னும்
பேருளம் தாங்கி வாழ்ந்த
பெருமையால் தமிழர் தாழ்ந்தார்
நீரிதைச் சான்று காட்டி
நி;றுவவும் வல்லீர் அன்றோ

எங்களின் நாட்டை ஆள
எங்களுக் குரிமை என்று
பொங்கிய உணர்ச்சியோடும்
புகலுவர் பிற நாட்டுள்ளோர்
எங்களின் தமிழ் நாட்டாட்சி
எங்களுக் குரிமையென்றே
இங்குள தமிழர் சொன்னால்
ஏதமென்றுரைக் கின்றார்கள்.

தமிழகம் தமிழர்க் கென்றால்
தமிழரே சிரிக்கின்றார்கள்
தமிழினால் தமிழரோடு
தமிழர்கள் பேசல் தாழ்வாம்
தமிழ்மொழி குறைந்ததென்று
தமிழர்கள் சாற்றுகின்றார்
தமிழினைத் தமிழர் போற்றி
தன்மானங் காத்தல் வேண்டும்.

ஆங்கிலர் வல்லாரென்றும்
அமெரிக்கர் பெரியா ரென்றும்
ஓங்குயர் ரூசியாவே
உலகத்தை ஆளுமென்றும்
ஈங்கிவை பேசித் தம்முள்
இகலுறும் தமிழர் தாங்கள்
ஏங்குறும் அடிமை வாழ்வில்
இருத்தலைச் சிறிதும் எண்ணார்.

கற்றிடும் தமிழர் தம்முள்
கலந்துரை யாடும் போதும்
உற்றிடும் உத்தி யோகம்
ஊதியம் இவற்றால் தாங்கள்
பெற்றிடும் பெருமை பேசிப்
பெருமிதம் அடைதலன்றி
இற்றை நாள் தமிழர் எய்தும்
இன்னலை எண்ண மாட்டார்.

எங்கள் நாடெமக்கே என்ற
எண்ணத்தில் ஊறிவாழ்ந்தோர்
தங்களின் நலத்தைப் போற்றித்
தனியர சாள்கின் றார்கள்
பொங்கிய அன்பி னாலே
புகல் பிறர்க்கெம் நாடென்றே
இங்குறை தமிழர் ஆட்சி
இழந்துளம் இடிகின்றார்கள்.

இவ்வாறு தமிழனின் அன்றைய நிலையை 1950 களில் கண்டு பாடியவர்- தொடர்ந்து இந் நிலைமாற என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதை சற்றே சிரத்தையுடன் நோக்கல் நன்று.

கொள்கைகள் நூறு நூறாய்க்
கொண்டடொரு குறிக்கோளின்றி
உள்ளமும் உரையும் வேறாய்
உணவுக்கும் உடைக்கும் வாழும்
வெள்ளைகள் தமிழர் என்றே
விளம்பிடும் வடுவைப் போக்க
வெள்ளமாய்த் தமிழர் கூட்டம்
வீறு கொண்டெழுதல் வேண்டும்

தமிழர்கள் நாங்களென்றே
தழைத்திடும் உணர்ச்சியோடு
தமிழர்கள் ஒன்றுபட்டால்
தமிழகம் தமிழர்க் காகும்
தமிழர்கள் உலகில் மீண்டும்
தலையெடுத்துலவுங் காலம்
தமிழர்கள் காண்பதென்றால்
தனியரசாட்சி வேண்டும்.

உடல் பொருள் ஆவியெல்லாம்
உரிமையைப் பெறுதற்காக
விடலுறும் வீறு தாங்கி
விடுதலைப் போரை ஆற்றி
அடலுறும் ஆண்மையாளர்
ஆயிரம் தமிழர் கூட்டம்
திடமுடன் எழுச்சி கொண்டால்
செந்தமிழ் நாட்டை ஆள்வோம்

கோவில்கள் கோடி கட்டிக்
கும்பிடுந் தொண்டில் எங்கள்
தாயினும் இனிய நாட்டைத்
தளைத்திடும் அடிமை ஆட்சி
மாயநாம் ஆற்றும் தொண்டே
வழிவழி எம்மைக் காக்கும்
தூயநல் இளைஞர் கூட்டம்
தொண்;டராய் எழுதல் வேண்டும்

தன்னரசாட்சி கொள்ளச்
சாதலும் தக்கதென்பார்
இன்னல்கள் கோடி ஏற்பார்
எங்கள்போல் மாந்தர் என்றால்
கன்னலோ எங்கள் ஆவி
கட்டிளந் தமிழர் எல்லாம்
இன்னமும் உறங்கல் ஏனோ
இறந்திடா வரம் பெற்றீரோ

நாட்டிற்காய்ப் போரில் மாய்ந்து
நடுகல்லில் நின்ற வீரர்
பாட்டிற்கே விருந்தாய் வாழப்
பரம்பரை உணர்ச்சி இன்றி
வீட்டிற்கே உழைத்து வாழ்தல்
வீரமோ விழித்தெழுந்து
நாட்டிற்காய்த் தொண்டு செய்வோம்
நம்தமிழ் இளைஞர் வாரீர்
நெஞ்சினில் தாய் நாட்டன்பு
நிழலிடும்; புதிய வாழ்வும்
அஞ்சிடோம் அடிமை வாழ்வை
அகற்றுவோம் என்ற வீறும்
நஞ்சினை அமுத மாக
நயந்;துணும் சால்பும் கொண்ட
வெஞ்சின மறவர் கோடி
விரைந்தனர் தமிழர் வாழ்ந்தார்.

வெற்றிச் சங்கூதிப் பாடி
வீரர்க்கு விருந்து செய்வோம்
கொற்றவை அடிகள் போற்றி
குன்றெனத் தோள்கள் வீங்கும்
நற்றமிழ் வேந்தர் மூவர்
நாட்டிய தமிழன் ஆட்சி
பெற்றிடும் இன்ப நாளின்
பெரு முரசொலியுங் கேட்கும்.

இந்தப் பாடல்கள் எல்லாம் இற்றைக்கு 63 வருடங்களிற்கு முன்னர் பாடப்பெற்றமை என்பதை இங்கு நோக்குதல் நல்லது.

இரசிகமணி.கனக.செந்திநாதன் இந்தப்பாடல்களைக் குறிப்பிட்டு ஈழகேசரியில் 13.11.1955ல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே பார்ப்போம்.

“இப்படியாக தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி காணும்பெருநோக்கோடு கவிதைக் கடிதம் நீளுகிறது. ஏறக்குறைய 125அருமையான கவிதைகள் கொண்ட இந்தக்கடிதக் கவிதைகள் நூல் வடிவில் வரவேண்டும். அதுவும் ஈழநாட்டில் தமிழினம் இடுக்கண் நிறைந்த இந்நாளில் வரவேண்டும். (ஈழகேசரி – 13.11.1955)

1964 இலிலும் இ பின்னர் 2010 இல் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட வேந்தனாரின் “கவிதைப் பூம்பொழில்” நூலில் இப்பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

நன்றி;

வேந்தனார் இளஞ்சேய்

பாலர்களின் உளமினிக்கப் பாலைக் காய்ச்சி
பக்குவமாய் தந்த நல்ல தாயின் உள்ளம்
ஞாலமதில் உன் கவியில் நாளும் வாழும்
நலமறிவோம் நறுந்தேனை ஆர்ந்தே தெய்வ
சீலமுடன் தெய்வநெறி துலங்க நின்ற
செய்யுளெலாம் செகமீது வாழும் அந்தக்
காலமதை அவைவெற்றி காணும் ஜயா!
கவின் தமிழில் அவையென்றும் ஒளிரும்மெய்யாய். (இ.நாகராஜன் )

சொந்தவொரு முயற்சியினால் தமிழைக் கற்று
துலங்கும் அருட் பெருங்குணத்தால் உலகுக் கெல்லாம்
தந்த கவி “அம்மா” இந்நாட்டின் செல்வத்
தமிழ்ச்சிறுவர் மழலையெலாந் தவழ வைத்தாய்
கொந்தளிக்கும உணர்ச்சியினால் புலமைவீறு
கொண்ட பெருங்கவியரசே தமிழ்சொல்மேடை
வந்தபெரு நாவலனே நின்சீர் இந்த
வையமெலாம் பரவிவர வாழ்த்துகின்றேன். (கவிஞர் தில்லைச்சிவன் )