Main Menu

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று!

பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன.

எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்கு தேவையான பல விடயங்களை கண்டுபிடிக்கத்தொடங்கினான். அவ்வாறு கண்டுபிடித்த விடயங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஒன்றுதான் மொழி.

ஒரு மனிதன் தனது தேவைகள் நிமித்தம் சக மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கு பல வழிகளைக் கண்டுபிடித்தான்.

ஆரம்பத்தில் சைகைகள் வாயிலாக உரையாட, தனது எண்ணங்களை கடத்த முனைந்த மனிதன், பின்னர் அவ்வாறான சைகைகளுடன் சேர்த்து சில ஒலிகளை எழுப்பி அதனூடாக தொடர்புகளை மேற்கொண்டான்.

அந்த ஒலிகளும் ஓசைகளும் நாளடைவில் மொழிகளாக உருவாக்கம் பெற்றன. இவ்வாறு பன்நெடுங்காலத்துக்கு முன்பதாகவே தோற்றம் பெற்ற ஆயிரக்கணக்கான மொழிகள் பின்னாட்களில் மனிதர்களுக்கான நாகரீகங்களை போதிப்பனவையாக அமைந்தன.

ஒரு இனத்தின் தொன்மை என்பது, ஒரு சமூகத்தின் கலாசார முக்கியத்துவம் என்பது குறித்த சமூகங்களின் மொழி சிறப்பினை வைத்து அளவிடப்பட்டன.

இவ்வாறு உருவாக்கம் பெற்ற மொழிகளில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

செம்மொழி அந்தஸ்து என்றால் என்ன?

ஒரு மொழியினுடைய தோற்றம், அதன் பழமைத்துவம், வரலாற்று முக்கியத்துவம் என்பனவற்றையும் ஒரு மொழியானது சமூகத்தில், மனிதர்களிடத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது போன்ற அளவீடுகளின் அடிப்படையில், முதல் நிலையில் இருக்கக்கூடிய மொழிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே செம்மொழி அந்தஸ்த்து என மேலோட்டமாக வரையறைப்படுத்திவிட முடியும்.

மொழிக்கான முக்கியத்துவத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் வெறுமனே ஒரு ஆய்வாளர் குழுவால் வழங்கிவிட முடியாது. மாறாக ஓர் மொழி தனக்கான சிறப்பை, தான் சார்ந்த மனிதர்கள், சமூகத்தினை அடிப்படையாகக்கொண்டு தானே உருவாக்கிக்கொள்கிறது என்றாலும்  இந்த அங்கீகாரம் ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணமாக உருவாக்கப்பட, உலகில் கட்டமைக்கப்பட்டுள்ள நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியிருக்கிறது.

அதனடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவதற்கு ஓர் மொழி சார்ந்த பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானவை குறித்த மொழியின் மூலத்தில் இருந்து தோற்றம் பெற்றிருக்கும் இலக்கியங்கள், அது சமூகத்தின்பால் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்.  இதனைத் தாண்டி ஒரு மொழி மூலமாக படைக்கப்பட்டிருக்கும் கலைகளும் குறித்த மொழி செம்மொழியாவதற்கு மிக முக்கியமான காரண கர்த்தாவாக காணப்படுகின்றன.

இவ்வாறான அளவீடுகள் அடிப்படியில் உலகில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகளை வரிசைப்படுத்தினால் தமிழ், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம், சீனம் ஆகிய மொழிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழை போலவே மேற்குறிப்பிட்ட மொழிகளும் வரலாற்று  முக்கியத்துவம், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த மொழிகள். என்றாலும் இவை அனைத்திலும் இருந்து தமிழ் எந்த வகையில் வேறுபடுகிறது என பார்க்கின்றபொழுது மேற்குறித்த செம்மொழிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள இரண்டு மொழிகளில் தமிழும் ஒன்று.

அதனடிப்படையில், சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளே தற்போது மக்களால் பயன்படுத்தப்படுகின்ற செம்மொழிகளாக காணப்படுகின்றன. இக்காரணத்தால் தமிழ், ‘வாழும்  செம்மொழி’ எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழ் இனக்குடும்பம் இதுவரை தனக்கான ஓர் தேசத்தைக் கொண்டிராவிட்டாலும்கூட, உலகெங்கும் பரந்து வாழும் மிகப்பெரிய இனக்குழுவாக காணப்படுகிறது.

அதனடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் உலகின் இந்தியா. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நோர்வே, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், மியன்மார் உள்ளிட்ட பல நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இவ்வாறு தமிழர்கள் பல்வேறு நாடுகளை தமது வாழ்விடமாக கொண்டுள்ளமைக்கு பல காரணங்கள் உள்ளன. பூர்விகம், கல்வி, பொருளாதாரம், யுத்தங்கள், இடப்பெயர்வுகள் என அவை நீண்டுகொண்டே போகும்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து 2004ஆம் ஆண்டு ஜூன் மதம் 06ம் திகதி வழங்கப்பட்டது. இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவரும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இந்த அந்தஸ்தினை தமிழுக்கு வழங்கினார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கபடுவதற்கு தமிழ் மொழி மூலம் உருவாக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட நூல்கள் காரணமாக இருந்திருக்கின்றன.

அதனடிப்படையில் உலகப்பொதுமறை என போற்றப்படும் திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,  தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உள்ளிட்ட நூல்களே அவை.

மேற்குறிப்பிட்ட நூல்கள் உலகளாவிய இலக்கிய உலகிலும்  சமூகத்திழும் எவ்வாறான தாக்கங்களை செய்திருக்கின்றன என்பதை புதிதாக யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமிழின் இலக்கியங்கள் எத்துணை சிறப்பு வாய்ந்தவையோ அதே அளவுக்கு தமிழின் இலக்கணத்துக்கான சிறப்புகளும் காணப்படுகின்றன.

தமிழ் இலக்கணம் பெரும்பான்மையாக தொல்காப்பியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. தொல்காப்பியம் ஏறக்குறைய 400ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பாலான ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஓர் மொழியின்   நீடிப்பு என்பது  அம்மொழி சார்ந்த மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது என்றால் மறுக்க முடியாது. அதனடிப்படையில், தமிழ் மொழி வெவ்வேறு தளங்களில் மொழி சார்ந்த மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அல்லது அல்லது பாவனைக்குட்படுத்தப்படுகிறது.

ஆய்வுகள் என்றும் இலக்கணம் என்றும் இலக்கியம் என்றும் தொடர்ந்தும் பேணப்பட்டு வரும் தமிழ் மொழியின் மற்றொரு வடிவம் வட்டார மொழி வழக்கு.

தமிழ் மொழி ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் பேசப்படும் ஒன்றாக காணப்படுகிறது. அதனடிப்படையில், இலங்கையில் கிழக்கிலங்கையினை சார்ந்தவர்களின் மொழிவழக்கு, மலையகத்தை சார்ந்தவர்களின் மொழிவழக்கு மற்றும் வட பகுதியைக் குறிப்பாக யாழ்ப்பாணத்தை சார்ந்தவர்களின் மொழிவழக்கு என்பன மாறுபடுகின்றன.

அது போலவே  தென்னிந்தியாவில், கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை என ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ் வேறு வேறு வட்டார வடிவைக்கொண்டு பாவனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு வட்டார வழக்குகள் காணப்படும் போதும் ஒவ்வொன்றும் தனித்துவத்தினையும் அழகையும் கொண்டவையாகும்.

நீண்ட இயற்கை அனர்த்தங்களை, நீண்ட பெரும் இன அழிப்புகளை, மிகப்பெரும் இடப்பெயர்வுகளை என சொல்லிலடக்க முடியா வரலாற்று துயர்களை தமிழ் சமூகம் கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளபோதும் இன்னும் அசைக்க முடியாத சக்தியாக, தமிழர்களின் பெருமைக்கான முழுமுதல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் தமிழ் மொழி உலகுள்ள வரையிலும் வாழும்.

பகிரவும்...