தமிழீழத் தேசியக் கொடி உருவாக்கப்பட்ட நாள் (நவ.21, 1990)

இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1990-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.21) அறிவித்தார். இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.

புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில் அனைத்து நிகழ்வுகளின் போதும் இந்த கொடியை ஏற்றும் வழக்கம் உருவானது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், தமது இன மற்றும் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தவும், தமது எழுச்சியை வெளிப்படுத்தவும் இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும்பாலானோர் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருதும் நிலையிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாக தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான நிகழ்வுகளின் போது இந்தியாவிலும் இக்கொடி உயர்த்தப்பட்டு வருகின்றது.

உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பல்வேறு நிகழ்வுகளின்போது உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் தேசியக் கொடி உயர்த்தப்படும் அதே களத்தில் தமிழீழத் தேசியக் கொடியையும் உயர்த்திய நிகழ்வுகளும் உள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !