Main Menu

ஜேர்மனியில் வரென்டோர்ப் மாவட்டத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுகிறது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் பரவியதால் முடக்கப்பட்ட, இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை எளிதாக்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியதால், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் முடக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களில் ஒன்றான சுமார் 280,000 மக்கள் வசிக்கும் வரென்டோர்ப் மாவட்டத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை நீடிக்க மாட்டோம் எனவும், இன்றுடன் குறித்த கட்டுப்பாடுகள் நிறைவுக்கு வருவதாகவும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் தலைவரான அர்மின் லாஷெட் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு நேர்மாறாக, வைரஸ் தொற்று பாதிப்பு இன்னமும் இருக்கும் சுமார் 360,000 மக்கள் வசிக்கும் அண்டை மாவட்டமான கெட்டர்ஸ்லோ மாவட்டத்தில், எதிர்வரும் குறைந்தபட்சம் ஜூலை 7ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், உள்ளூர் முடக்கநிலை மக்களை வீட்டிலேயே தங்க கட்டாயப்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

ஜேர்மனியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1 இலட்சத்து 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்ததோடு, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.