ஜனாதிபதி தொடர்பாக மங்கள மஹிந்தவுக்கு கடிதம்

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக விசனம் தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பிரதமருக்கு எழுதியுள்ள குறித்த கடிதத்தில், “உங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பதவியினை வகித்தவன் என்கின்ற ரீதியில் இம்மடலினை எழுதுகிறேன்.
நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, மத்திய வங்கி மற்றும் திறைசேரி – முறை நாணயக் கொள்கை மற்றும் அரசிறைக் கொள்கைக்கான பொறுப்புக்களைக் கொண்ட இரண்டு அரச நிறுவனங்கள் உங்களின் பொறுப்பின் கீழேயே வருகின்றன. அரசியலமைப்பு ரீதியாக எமது நாட்டின் பொருளாதாரத்தின் மேற்பார்வையாளர் நீங்களே.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியின் வசவுகளுக்கு ஆளானதும் அது பின்னர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதும் முன்னெப்பொழுதும் நடந்திராத நிகழ்வாகும்.
கமராக்களின் பளீர் வெளிச்சத்தில் நிறுவனத்தினையும் அதன் அதிகாரிகளையும் மிகவும் வெட்கப்படும் விதத்தில் ஜனாதிபதியின் கோபக் குமுறல் பகிரங்கமாக அவமானப்படுத்தியுள்ளது.
இது விசுவாசத்தின் இரக்கமற்ற தன்மையினையும் இழிதன்மையினையும் பிரதிபலிப்பதுடன் எமது தேசத்தின் பிள்ளைச் செல்வங்களுக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான முன்னுதாரணத்தினைக் காட்டி நிற்கின்றது.
மத்திய வங்கி மீது நியாயமற்ற முறையிலும் இங்கிதமற்ற முறையிலும் தொடுக்கப்பட்டிருக்கும் கடுமையான குற்றச்சாட்டில் இருந்து அதனைப் பாதுகாப்பது எனது கடமை என நான் நினைக்கின்றேன. ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு உண்மையில் எவ்விதமான அடிப்படைகளும் இல்லை.
அவரின் மிகப் பெரும் பதவியின் கேள்விகளுக்கும் அழுத்தங்களுக்கும் அவரால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது என்பதையே உண்மையில் அவை உணர்த்துகின்றன. அவருக்கு இருப்பது மிக அற்பமான பொருளாதார, அரசியல் மற்றும் தீர்மானம் வகுத்தல் அனுபவமே என்பதைக் கருத்திற்கொள்கையில் இது ஆச்சரியமான ஒன்றல்ல” என தெரிவித்துள்ளார்.
பகிரவும்...