Main Menu

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் பிறந்த தினம்

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக் கவிராயரின் தம்பியாகிய சின்னத்தம்பி குமாரசாமிப்புலவரின் பாட்டனாவார்.

ஐந்து வயதடைந்த குழந்தை குமாரசுவாமி குலகுருவாகிய வேதாரணீயம் நமசிவாய தேசிகரால் வித்தியாரம்பஞ் செய்து வைக்கப்பெற்றார். எழுத்து வாசிப்பு என்பவற்றை வீட்டிலேயே தந்தையாரிடம் கற்றுக்கொண்ட குமாரசுவாமிப்புலவர், மல்லாகம் ஆங்கில பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த போது தந்தையார் ஆங்கிலக்கல்வியின் மீது வெறுப்புக்கொண்டு புலவரை அங்கிருந்து இடைநிறுத்தி முருகேச பண்டிதரிடம் தமிழ்ககல்வி கற்க அனுப்பினார். அந்தவேளை முருகேச பண்டிதரிடம் ஊரெழு சரவணமுத்துப்பிள்ளை, மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை என்போரும் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். மூவரும் நீதி நூல்களையும், யாப்பருங்கலகாரிகை, தொல்காப்பியம் முதலிய இலகக்ண நூல்களையும் கற்று வல்லவராயினர். கல்வி கற்பதில் இயல்பாகவே விருப்புக்கொண்டிருந்த காரணத்தால், புலவர் நூலறிவில் உயர்ந்து விளங்கினார். சுவைபடப் பாடுவதிலும், அவைக்கஞ்சாது பேசுவதிலும் புலவர் சிறப்புற்று விளங்கினார். இந்தக்காரணங்களால், அவரைப் புலவரென்றே எல்லோரும் அழைத்தனர். புலவரென்பது அவருக்கு இயற்பெயராகி அமைந்தது.

பாரேறு சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே
ஏரே இடுகுறி யாகிப் புலவரெனும் பெயர்தான்
பாரேறு மற்றைப் புலவருக்குக் காரணப் பண்புறலால்
சீரே இடுகுறி காரண மாகித் திகழ்ந்ததுவே.

என்று வித்துவசிரோமணி கணேசையர் குறிப்பிடுவார்.

முருகேச பண்டிதரிடம் கற்க வேண்டியவற்றை கற்றுபின் பன்மொழிப்புலவரும் உறவினருமாகிய நாகநாதபண்டிதரை அணுகி பாடங்கேட்ட புலவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மேலுந்தெளிவு பெற்று வடமொழிக் கல்வியையும் விரும்பிக் கற்று நிறைந்த புலமையுடையவராயினார். சமய நூல்களை தம் குலகுருவாகிய நமசிவாய தேசிகரிடம் கற்றுக்கொண்டார். தமது கல்வி வளம்பெற உதவிய குரவர் மூவரையும் போற்றப் புலவர் தவறியதில்லை.

தூய மயிலணிச் சுப்பிர மணியனைத் தூநமச்சி
வாய குருவை முருகேச பண்டித மாமணியைப்
பாய வடகலை தேர்நாக நாத சபாமணியைக்
காய மொழிமனஞ் சேர்த்ததும் நங்கண் மணிகளென்றே.

என்று தாம் ஆக்கிய மேகதூதக்காரிகை என்னும் நூலின் குருவணக்கத்தில் தமது குருக்களை புலவர் போற்றிப் பாடியுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை காணும் வாய்ப்பும் புலவரின் பதினைந்தாவது வயதிற் கிடைத்திருக்கின்றது. அவரது தோற்றம், சைவவேடம், பிரசங்கம், அஞ்சா நெஞ்சம், கல்வியறிவு முதலான குணநலன்கள் புலவரை வெகுவாக ஈர்த்துவிட்டன. அதனால் நாவலர் செய்யும் பிரசங்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து கேட்டு வந்தார். அவருடன் நேரே பழகவிரும்பிய புலவர் ஊரெழு சரவணமுத்துப்புலவரின் உதவியுடன் நாவலரிடம் சென்று தொடர்பு கொண்டுள்ளார். அந்த தொடர்பு நிமித்தமான சந்திப்பு நாவலர் அமரராகும் வரை தொடர்ந்தது. இலக்கண இலக்கியங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்க்க, இந்த சந்திப்பு பேருதவி புரிந்தது. நாவலர் பெருமானிடம் புலவருக்கிருந்த பேரன்பினை நாவலர் மறைவின்போது புலவர் பாடிய பாடல்கள் கொண்டு தெளியலாம்.

கல்விக் களஞ்சியம் கற்றவர்க் கேறு கருணைவள்ளல்
சொல்வித்து வப்பிர சாரகன் பூதி துலங்குமெய்யன்
நல்லைப் பதியினன் ஆறு முகப்பெரு நாவலனுந்
தில்லைப் பதியினன் நடராசன் சேவடி சேர்ந்தனனே.

என்பது புலவர் பாடிய பலவற்றுள் ஒன்று.

நாவலர் மறைவின் பின், அளவெட்டியில் வசித்த கனகசபைப்புலவரை நாடி இலக்கணஞ் சம்பந்தமான ஐயங்களை நீக்கிக்கொள்ளுவார் புலவர். சைவசித்தாந்த சாஸ்திரத்தில் தமக்குண்டான ஐயங்களை இணுவில் நடராசையரை அணுகித்தீர்த்துக்கொண்டார். ஏழாலை சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியராக முருகேச பண்டிதர் நியமனம் பெற்ற அதேவேளை சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்கள் உதவியாசிரியராக பதவியேற்றார். முதல் வருட இறுதியில் முருகேச பண்டிதர் விலகி வேறிடஞ்செல்ல, தலைமைப் பொறுப்பினை ஏற்றார். புலவர் பதவியேற்று இருபது வருடங்களின் பின்னர் தாபகர் தாமோதரம்பிள்ளை அவர்களின் நோய் மற்றும் இயலாமை காரணமாக 1898இல் வித்தியாசாலை மூடப்பட்டது. பிற்காலத்தில் புகழ்பூத்த சான்றோர்களாக விளங்கிய வித்துவசிரோமணி சி. கணேசையர், சுன்னாகம் மாணிக்கத்தியாகராச்ப்பண்டிதர், தெல்லிப்பளை பாலசுப்பிரமணிய ஐயர் பன்னாலை வித்துவான் சிவானந்தையர் முதலியோர் புலவரிடம் ஏழாலை சைவப்பிரகாச வித்தியாலயத்தில் பயின்று வெளியேறியவர்களிற் சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் புலவர் அவர்கள் 1902 இல் நாவலர் அவர்கள் தாபித்த வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தலைமையாசிரியராக நியமனம் பெற்றார். 1848 இல் நிறுவப்பட்ட அந்தப் பாடசாலை நாவலரின் பின் புலவர் தொடர்பு பட்ட காலத்திலிருந்தே வளர்ந்து உயர் கல்விப்பீடமாயது என்பர். சைவப்பிரகாச வித்தியாசாலையின் ஒரு அங்கமாக நிறுவப்பட்ட காவிய பாடசாலையும், புலவர் அவர்களின் முயற்சியால் ஒரு மரபுக் கல்வி நிறுவனமாக வளரத்தெடுக்கப்பட்டது. யாழப்பாணம் பண்டிதர் இரத்தினேஸ்வர ஐயர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பண்டிதர் மருதையனார், மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, வவுனியா பண்டிதர் இராசையனார் என்போர் காவிய பாடசாலையிற் புலவரிடம் பாடங் கேட்டோரிற் சிலர் எனலாம். புலவரிடம் நேரே தொடர்புகொண்டு பாடங்கேட்டோருள் வித்தகம் கந்தையாபிள்ளை, மகாவித்துவான் சி. கணேசையர் என்போர் குறிப்பிடக் கூடியவர்கள். வாதநோயாற் பீடிக்கப்பட்ட புலவர் வீட்டிலிருந்த நிலையிலும் விரும்பி வந்த மாணவருக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்பித்தார்.

புலவர் செய்யுள் நூல்கள் பலவற்றை ஆக்கியுள்ளார். வதுளைக் கதிரேசர் பதிகம், வதுளை மாணிக்க விநாயகர் பதிகம், மாவைப்பதிகம், துணைவை அரசடி விநாயகர் பதிகம், அமராவதி புதூர் பாலவிநாயகர் பதிகம், வதுளைக் கதிரேசர் ஊஞ்சல், துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல், கீரிமலை நகுலேசர் ஊஞ்சல், ஏழாலை அத்தியடி விநாயகர் ஊஞ்சல், வதுளைக் கதிரேசர் சிந்து, மாவை இரட்டை மணிமாலை, நகுலேசர் சதகம், சாணாக்கிய நீதிவெண்பா, இராமோதந்தம் முதலியன புலவரின் ஆக்கங்களான பிரபந்தங்களாம். இலக்கண சந்திரிகை, வினைப்பகுபத விளக்கம் என்னும் இலக்கண நூல்களையும், தமிழப் புலவர் சரிதம், இதோபதேசம், சிகபாலதரிசம் என்னும் உரைநடை நூல்களையும் ஆக்கிப் புலவர் வெளியிட்டுள்ளார். திருக்கரைசைப் புராணவுரை, சூடாமணி நிகண்டு சொற்பொருள் விளக்கம், யாப்பருங்கலப் பொழிப்புரை, வெண்பாப்பட்டியல் பொழிப்புரை, இரகுவம்மிசக் கருப்பொருள், கலைசைச் சிலேடைவெண்பா அரும்பதவுரை, நீதிநெறி விளக்கப் புத்துரை யாப்பருங்கலக்காரிகையுரை, மறைசையந்தாதியுரை என்பனவும் புலவர் ஆக்கங்களே. சங்க மற்றும் சங்க மருவிய காலத்து நூல்களிடத்தே காணப்படும் அருஞ்சொற்களை தொகுத்து பொருள் தெளிவுடன் புலவர் இலக்கிய சொல் அகராதி எனப்பெயரிய நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் புலவர் மேகதூதக் காரிகை, ஏகவிருத்த பாரதம். இராமாயணம், பாகவதம், இராவணன் சிவதோத்திரம் என்னும் மொழிபெயர்ப்பு நூல்களையுஞ் செய்துள்ளார்.

மாவை இரட்டை மணிமாலையிலிருந்து ஒரு பாடலை பார்ப்போம்.

நின்மலனைச் சண்முகனை நித்தியமுத் துக்குமார
சின்மயனை நெஞ்சே தினந்தினமும் – பன்மலர்க
டூவித் திருமாவைத் தொல்பதிசென் றேத்துதிநீ
பாவங்க ணீங்கும் படி.

1892 இல் சின்னாச்சியம்மையாரை திருமணம் செய்து மூன்று மகவுகளை பெற்றுக்கொண்ட புலவர் அவர்கள் 1922.03.22 இல் இறைவனடி சேர்ந்தார்.

பகிரவும்...