Main Menu

சிறிலங்காவில் வெள்ளை வான் சித்திரவதைக்கு நீதி கேட்கும் ஊடகவியலாளர்!

சிறிலங்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரான போத்தல ஜயந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளை வான் தன்னைக் கடத்திய சம்பவம் தொடர்பாக விபரிக்கிறார். இவர் பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பல மணி நேரங்கள் அந்த வானிற்குள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் ஊடகவியலாளர் கூறினார்.

இவ்வாறான சித்திரவதைகளின் போது இவரது இரண்டு கால்களின் எலும்புகள் உடைக்கப்பட்டன. இவரது விரல்கள் நொருக்கப்பட்டுள்ளன. இவருக்கு சூடு வைக்கப்பட்டது. இவரது தாடி மற்றும் தலைமுடி போன்றன வெட்டப்பட்டன. இவரது வாய்க்குள் பொருட்கள் திணிக்கப்பட்டன. இவ்வளவு சித்திரவதைகளின் பின்னர் இவர் வெள்ளைவானிலிருந்து வீதியோரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தார்.

பின்னர் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் வீதியில் வீசப்பட்டிருந்த போத்தல ஜயந்தவைக் கண்டனர். பின்னர் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பல பத்தாண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும் ஜயந்தவின் வழக்குடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. தற்போது சிறிலங்காவிற்குத் திரும்பி வந்துள்ள ஜயந்த தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடுத்துள்ளார். ஆனால் இவருக்கான நீதி விரைவில் கிடைக்குமா என்பது சந்தேகமே.

தற்போது 52 வயதாகும் ஜயந்த ,சிறிலங்காவிலுள்ள  உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியிருந்தார். இந்தச் சங்கமானது இந்த நாட்டின் மிகப் பெரிய அமைப்பாகும். ஜயந்த இந்த அமைப்பின் தலைவராக இருந்த போது ஊடக அடக்குமுறைக்கு எதிராக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார். அத்துடன் அரசாங்கத்திற்கு  எதிராக கருத்துக்களை வழங்கினால் ஆபத்து ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டபோதிலும் ஜயந்த ஊடக அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்.

தன்னைக் கடத்தியவர்கள் யார் என்பது ஜயந்தவிற்குத் தெரியாது. ஆனால் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலராகவும் பணியாற்றிய கோத்தபாய ராஜபக்சவே தன் மீதுகோபம் கொண்டிருப்பதாக ஜயந்த தெரிவித்தார். ராஜபக்சவிற்கு எதிராக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையே இதற்கான காரணம் என ஜயந்த தெரிவித்தார்.

ராஜபக்சவின் ஆட்சியில் பல ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டனர், ஆனால் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளில் தான் ஈடுபடவில்லை என ராஜபக்ச மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்தார். போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் சரியான எண்ணிக்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளிலும் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக இவர்கள் சிறிலங்கா இராணுவத்தினர், அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் அல்லது புலிகள் அமைப்பால் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னரும், கடந்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதாக வாக்குறுதியளித்து நாட்டின் அதிபராக மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பீடம் ஏறிய பின்னரும் இவ்வாறான ஊடக அடக்குமுறைகள் மற்றும் பல்வேறு மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது பல்வேறு சாட்சியங்களைத் திரட்டியுள்ளது.

பல்வேறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்த பின்னர் சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று பிரித்தானியா மற்றும் சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த 46 இலங்கைத் தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட சாட்சியங்களைக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சாட்சியங்களை வழங்கிய தமிழர்கள் சிறிலங்காவின் பாதுகாப்புப் படைகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருந்தனர். இவர்கள் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் இல்லாது தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட காலப்பகுதியில் இவர்கள் தாக்கப்பட்டனர், இவர்களின் மலவாசல்களில் முட்கம்பிகள் செருகப்பட்டன. புலிகளின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடங்களைக் காண்பிக்குமாறு கோரியே தம்மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீறல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் நீதியை எட்டவில்லை. ஒரு சில உயர் மட்ட வழக்குகள் மாத்திரமே நீதிமன்றுகளில் விசாரணை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவையும் மிகவும் மெதுவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகவியலாளர் ஜயந்த கடத்தப்படுவதற்கு ஒரு சில மாதங்களின் முன்னர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஊடவியலாளர் கீத் நொயார் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இராணுவத்தினர் கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ்விரு ஊடகவியலாளர்களும் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டிருந்தனர். சித்திரவதைகளின் பின்னர், ஊடகவியலாளர் நொயார் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தார்.

இவ்வாறான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதில் சிறிசேன அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றவாளிகள் சிறிலங்கா இராணுவத்தை அல்லது ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்காவில் புதிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர், தனது வழக்குத் தொடர்பாக சிறிலங்கா காவற்துறைக்கும் சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட இழப்பீட்டு ஆணைக்குழுவிற்கும் கடிதம் எழுதிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஜயந்த தெரிவித்தார்.

குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிறிலங்கா இராணுவ வீரர்களைக் கைது செய்வதைத் தான் எதிர்ப்பதாக அதிபர் சிறிசேன வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ‘போர்க் கதாநாயகர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் எனக் கூறுவது வேடிக்கையானது. இவ்வாறான அறிக்கைகளை வெளியிடும் போது, நீங்கள் விசாரணையாளர்களுக்கு என்ன செய்தியைக் கூறுகிறீர்கள்?’ என நேர்காணல் ஒன்றின் போது ஜயந்த வினவியிருந்தார்.

‘இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைத் தண்டிப்பதன் மூலம் சிறிலங்கா இராணுவம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்’ என ஊடகவியலாளர் ஜயந்த தெரிவித்தார்.

ஜயந்தவின் சொந்த இடமான மிரிஹானவில் காவற்துறை அதிகாரி ஒருவர் இவரைக் கடத்திய வெள்ளை வானின் இலக்கத்தைக் கூறுமாறு கேட்டிருந்தார். ஆனால் வாகனத்தின் இலக்கத்தைத் தன்னால் பார்க்க முடியவில்லை என ஜயந்த கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 20ஆம் நாள்) ஜயந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்ததுடன் உள்ளுர் காவற்துறையிடமிருந்து தன் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பொறுப்பேற்குமாறும் கோரியிருந்தார்.

இதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவற்துறை மா அதிபர் ஜயந்தவின் வழக்குத் தொடர்பாக விளக்கியிருந்தார். இதன் பின்னர் ஜயந்தவிடம் புலனாய்வாளர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது ஜயந்தவின் வழக்கானது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்படுகிறது. ஆனாலும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இராணுவத்தினர் ஒத்துழைக்காததால் நீதிமன்றங்களால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என ஊடகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு வெள்ளை வானைப் பார்க்கும் போதும் தான் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாகவும்  இவ்வாறான வடுவுடன் வாழ்வதை விட இறந்திருக்கலாம் என சிலவேளைகளில் தான் நினைப்பதாகவும் ஜயந்த தெரிவித்தார். உடைந்த தனது கால் எலும்புகளைப் பொருத்துவதற்காக உலோகத் தகடுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் வேதனையைத் தருவதாகவும் அமெரிக்காவில் குளிர் காலநிலையின் போது இந்த வலியை தான் அதிகம் உணர்ந்ததாகவும் ஜயந்த தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகின்ற போதிலும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கு அரசாங்கம் இழுத்தடிப்பதாக உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தற்போதைய தலைவர் லசந்த றுகுணுஜ் தெரிவித்தார்.

‘நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம். இரண்டு ஆண்டுகளாக விசாரணையை மேற்கொள்ளுமாறு நாங்கள் அதிபர் செயலக ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். குற்றவாளிகள் சமூகத்தில் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இதனால்  இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு உங்களால் உத்தரவாதம் அளிக்கமுடியாது’ என றுகுணுஜ் தெரிவித்தார்.

ஜயந்த கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அமெரிக்கத் தூதுவர் வைத்தியசாலையில் சென்று இவரைப் பார்வையிட்டிருந்ததுடன் அமெரிக்காவில் தங்குவதற்கான வசதிகளையும் வழங்கியிருந்தார். முதலில் இதனை ஜயந்த மறுத்திருந்தார். ஆனாலும் தொடர்ந்தும் சில மாதங்களாக அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதால் அமெரிக்காவிற்குச் செல்வதென ஜயந்த தீர்மானித்தார். தற்போது ஜயந்த அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

12 வயதில் சிறிலங்காவை விட்டு வெளியேறிய ஜயந்தவின் மகள் தற்போது நியூயோர்க்கில் பொறியியல் துறையில் கற்பதாகவும் இவர் பொறியியலாளர் பட்டத்தைப் பெற்று வெளியேறிய பின்னர் சிறிலங்காவில் மீண்டும் பணிபுரியத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜயந்த தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – KRISHAN FRANCIS
வழிமூலம்    – ASSOCIATED PRESS
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...