கருக் கலைப்புக்கு எதிராக வடக்கு அயர்லாந்தில் ஆயிரக் கணக்கானோர் அணி திரள்வு

வடக்கு அயர்லாந்தின் கருக்கலைப்பு சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
ஸ்ரோர்மொண்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், பங்கேற்றிருந்த அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
வடக்கு அயர்லாந்தைப் பொருத்தவரையில் சில வரையறைக்கு உட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கருக்கலைப்புக்கே அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ‘தாராளமயமான கருக்கலைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் அங்குள்ள சட்டவிதிகளில் மாற்றங்களைக் கொண்டுவர சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கடந்த ஜூலை மாதம் புதிய சட்டமூலத்தைக் கொண்டு வந்தது.
இதற்கு வடக்கு அயர்லாந்தில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதுடன், தொடர் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன. ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சட்டமூலம் மீளப்பெறப்படாவிடின் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.