Main Menu

கமல்ஹாசன் கருத்து குறித்து பொய் பிரசாரம் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருவதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சமீபத்தில் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் ஆற்றிய உரையினை பிரிவினையை தூண்டுகின்ற சில அரசியல் அமைப்புகள் முற்றிலுமாக திரித்தும், திசை மாற்றியும் வி‌ஷம பிரசாரம் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து அதன் மூலமாக தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில வி‌ஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருகின்றனர்.

கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பேசும்போது தீவிரவாதம் எந்த மதத்தினாலும் எந்த வடிவில் முன்னெடுக்கப்பட்டாலும் அது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்திருந்தார்.

அவரது உரையில் அவர் ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்தும் ஒன்றிணைந்தும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சமூகமாக இருந்திட வேண்டும் என்கிற தன்னுடைய எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தி பேசி உள்ளார்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இந்தியர் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுடன் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு, மக்களின் பேராதரவோடு நடைபோட்டு கொண்டிருக்கின்ற மக்கள் நீதி மய்யம் கட்சி இக்கருத்தினை வலியுறுத்தி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து கொண்டே இருக்கும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தனது இந்த நிலைப்பாட்டினை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை வலியுறுத்தி கொண்டே இருக்கும். மக்கள் நீதி மய்யம் நீதி மன்றங்கள் மீதும், சட்டத்தின் மீதும் பெரும் மரியாதையும், மதிப்பும் கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.