உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை
உலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்குறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு இந்த பட்டினிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியலில் பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.
உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் நேபாளம் 73ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 75 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 88ஆவது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், 94ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் வீதம் 27.2 ஆக இருப்பதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
132 நாடுகளில் பட்டினியால் வாடும் மக்களின் விபரங்களைக் கணக்கெடுத்த இந்த ஆய்வில், 107 நாடுகளின் புள்ளி விபரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, இது ஏற்கனவே பதிவான புள்ளி விபரங்கள் என்றும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தாக்கம் இதில் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 102ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது எட்டு இடங்கள் முன்னேறி 94ஆவது இடத்தைப் பிடித்தாலும் அண்டை நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.