TRT தமிழ் ஒலி வானொலி 29வது ஆண்டில் தடம் பதிக்கிறது
TRT தமிழ் ஒலி வானொலியின் அனைத்து அன்பு நேயர்களுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
அத்துடன், 29வது பிறந்த தினத்தை பெருமையோடும் மகிழ்வோடும் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஐரோப்பிய முதல் தமிழ் வானொலியான TRT தமிழ் ஒலியின், வளர்ச்சிப்பாதையில் எம்முடன் கை கோர்த்து, அனைத்து வேளைகளிலும் உற்சாகம் தந்து, உறவுகளாய் இணைந்து இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பு நேயர்களுக்கும் மற்றும் வர்த்தகப் பெருமக்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!
தமிழ் ஒலி வானொலியானது 1997ம் வருடம் உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று பிரான்ஸ் பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பிய வான்வெளியூடாக காற்றலையில் மிதந்து வந்து, அன்றைய நாட்களில் உறவுப்பாலமாக உலகத் தமிழர்களை இணைத்தது TRT தமிழ் ஒலி வானொலி என்றால் அது மிகையாகாது. இன்றும் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து 29ம் ஆண்டிலே வெற்றிநடை போடுகிறது.
பல்வேறு அர்ப்பணிப்புகளிடையே தொடர்ந்து தமது சேவையை ஆற்றி வரும் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் அரசியல் ஆய்வாளர்கள் அனைவருமே TRT வானொலியின் வளர்ச்சியில், அளப்பரிய பங்கு வகிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக எமது உயிரினும் மேலான அன்பு நேயர்களின் ஆத்மார்த்தமான பங்களிப்புகள் எம்மை இவ்வாறு நெடுந்தூரம் பயணிக்க வைத்துள்ளது. மேலும் வானொலிக்கான விளம்பரங்களை தந்துதவும் வர்த்தகப்பெருமக்கள் நிதிப்பங்களிப்பினூடாக தாமும் இணைந்து வானொலியின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கின்றனர்.
எமது வானொலியில், சிறுவர் முதல் பெரியோர் வரை கேட்டும் இணைந்தும் மகிழக்கூடிய, தரமான நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பாவதை அனைவரும் அறிவீர்கள். அரசியல், அறிவியல், சினிமா, பக்தி, நகைச்சுவை, சிறுவர் நிகழ்ச்சி என பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான, உணர்வுபூர்வமான அனைத்து நிகழ்ச்சிகளும் மென்மேலும் மெருகு பெற்று வருவது, உலகெங்கும் பரந்து வாழும் அன்பிற்கினிய எமது நேயர்களின் பங்கு பெறும் ஆர்வத்தாலும் என்பதை நாம் அறிவோம். அதற்கு எமது பலகோடி நன்றிகள்.
TRT தமிழ் ஒலி தொடர்ந்து மென்மேலும் வளர்ச்சியடைய உங்களில் பலரும் உங்கள் இல்ல சுப நிகழ்வுகளை, துயர் சுமந்த நினைவுகளை அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வரும் தருணம், அதனை வானொலியானது வானலைக்கு எடுத்து வந்து, நேயர்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை குவித்துக் கொடுக்கிறது. அதனை செவிமடுத்து உங்கள் உள்ளங்கள் ஆனந்தத்தில் நிறைவதை, ஆறுதல் அடைவதை நாம் அறிவோம். வரும் காலங்களிலும் உங்கள் வானொலி நிலைத்து நிற்க உங்கள் இதே பணி தொடர வேண்டுகின்றோம்.
24 மணிநேர தமிழ் வானொலியான TRT தமிழ் ஒலி சவால்களை சங்கடங்களை சந்தித்தாலும் எதிர்வரும் காலம் சந்தோஷங்களை சகல வெற்றிகளை மட்டுமே கொடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு எம் இனிய நேயர்கள் நலன்விரும்பிகள் அனைவரதும் கரங்களை இறுகப்பற்றி இனிதே இணைந்து பயணிப்போம்!
