Main Menu

La Défense இருந்து Roissy விமானநிலையம் வரை சாரதி இல்லா பேருந்து..!

பரிசின் வியாபார நகரமான La Défense இல் இருந்து Roissy விமான நிலையத்துக்குச் செல்ல சாரதி இல்லா பேருந்து கொண்டுவரப்பட உள்ளது.  இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டை இலக்கு வைத்து கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டம் இதுவரை  முழுமையாக வடிவமைக்கப்படவில்லை என்ற போதும், Renault நிறுவனம் இந்த பேருந்து தயாரிக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது. பேருந்து La Défense இல் ஆரம்பித்து எங்கேயும் நிற்காமல் நேரே சாள்-து-கோல் விமானநிலையத்தை சென்றடையும் எனவும், பயணிகள் இப்பேருந்தின் பயணச் சிட்டையை திறன்பேசியில் உள்ள செயலி மூலம் உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக Renault நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் Cyril Duault தெரிவிக்கும் போது, <<தற்போது பேருந்தினை வடிவமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். எவ்வித சந்தேகங்களும் இன்றி இது ஒரு அதி நவீன மிக மிக பாதுகாப்பான சொகுசு மகிழுந்தாக இருக்கும்.>> என குறிப்பிட்டார்.  இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும் இல்-து-பிரான்சுக்கான போக்குவரத்து துறை தலைவருமான Valérie Pécresse இது குறித்து தெரிவிக்கும் போது, <<நேரத்தை மிச்சப்படுத்துவது இதன் நோக்கமல்ல. வீதி சுமையை குறைப்பதே எங்கள் நோக்கம். வாகனம் ஒன்றில் அதிக பயணிகள் பயணிக்க வைப்பது தற்போதைய தேவையாக உள்ளது. ஒருவருக்கு ஒரு மகிழுந்து என்பதும் அதற்கான எரிபொருள் மாசடைவு என்பதும் மிக மிக ஆடம்பரமான ஒன்று. ஆனால் இந்த பேருந்தில் விமான நிலையத்துக்கான பயணிகள் 10 இல் இருந்து 16 பேர் வரை பயணிக்க முடியும்.>> என குறிப்பிட்டார்.

பகிரவும்...