Main Menu

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு – மாவை. சேனாதிராஜா

வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்துடன், மக்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் தீர்மானங்களில் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “முக்கியமாக இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று பலரரும் எதிர்பார்த்துள்ளார்கள்.

குறிப்பாக தேர்தலில் தமிழ் மக்களின் விடுதலை, தமிழ் மண்ணின் விடுதலை மற்றும் ஏனைய பிரச்சினைகளின் தீர்வுக்காக பல விடயங்களை நாம் அதிகார பூர்வமற்ற வகையிலும் வேட்பாளர்களுடைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இன்னும் பல கட்சிகளுடன் பேச வேண்டியுள்ளது. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக என்ன விடயங்களை குறிப்பிடுகிறார்கள் என்பதையும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கும் விடயங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

அந்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், மக்களுடன் மாவட்டங்கள் ரீதியாக முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமையவும் தமிழ் கூட்டமைப்பு தனது முடிவை அறிவிக்கவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளதாக தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, அவர்களுடன் ஒத்துழைத்து அவர்கள் முன்னெடுக்கும் தீர்மானங்களையும் இணைத்து ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...