Main Menu

யோஷித – டெய்ஸி பணமோசடி வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, 2026 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (28) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதற்கிடையில், இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியான டெய்ஸி ஃபாரஸ்ட் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அவருக்குப் பதிலாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இவ்வழக்கை நவம்பர் 3-ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

சட்டவிரோத வழிகளில் ஈட்டியதாகக் கூறப்படும் சுமார் 57 மில்லியன் ரூபாயை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்ததன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.