முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு இறுதிநாள் நினைவேந்தல்
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (26) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.
தியாகதீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தார்கள்.
