ஷானி அபேசேகர உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி சாந்த ஜயதிலக இந்த இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தார்.
ஷானி அபேசேகர மற்றும் ரவி சேனவிரத்ன ஆகியோர் முன்னதாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சத்தியப்பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாக முதல் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அதேவேளை, அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பித்திருந்த முறைப்பாட்டின் உள்ளடக்கம் நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துள்ளதாக இரண்டாவது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு மனுக்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்றம், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது.
