Main Menu

பிரான்ஸ்: கடும் வெப்ப அலை: 20 மாவட்டங்களுக்கு “செம்மஞ்சள்” எச்சரிக்கை!

நாடு முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France “செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Corse-du-Sud, Haute-Corse, Doubs, Drôme, Gard, Isère, Jura, Loire, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Var, Vaucluse மற்றும் Territoire de Belfort ஆகியவை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சில பகுதிகளில், குறிப்பாக Hautes-Alpes மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய இடங்களில் வெப்பநிலை சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும், தென்கிழக்கு பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என Météo-France எச்சரித்துள்ளது. இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழை காரணமாக வெப்பநிலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் Ariège, Haute-Garonne, Tarn, Tarn-et-Garonne, Lot, Corrèze மற்றும் Dordogne ஆகிய 7 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை மாலை 4 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பிரான்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியதுடன், ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை பல பகுதிகளில் வெப்பநிலை 20°C-க்கும் அதிகமாக பதிவானது; Méditerranée கடற்கரை மற்றும் Rhône பள்ளத்தாக்கில் சில இடங்களில் 25°C வரை வெப்பநிலை காணப்பட்டது.