வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப் படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி
வெசாக் தினம் என்பது வெறும் ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாக விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புனித வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புத்த பெருமானின் பிறப்பு, துறவறம் (புத்தத்துவமடைதல்) மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட ஒட்டுமொத்த பௌத்த தர்மமும் அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியாகும்.”
அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த முன்மாதிரியான பாடமே பௌத்த தர்மம் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் போதித்த தர்மமாகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, முதன்முதலில் மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் சுட்டிக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான நல்நோக்கங்களுக்காக சமூகத்தை ஒன்றிணைக்க, பௌத்த தர்மம் காட்டும் இந்த உள அமைதி வழியானது, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானது.
அண்மையில் நம் நாட்டில் அமைதிக்கான பாதயாத்திரையில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர தேரர்களும் இலங்கைக்குக் கொண்டு வந்த செய்தி இதுவே என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வெசாக் வைபவத்தை முன்னிட்டு கொள்கை ரீதியான வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி ஏற்பாடு செய்யப்படும் தானம், சீலம், தியானம் போன்ற நிகழ்வுகளும், அன்னதானப் பந்தல்கள், பௌத்த பக்திப் பாடல்கள், அழகிய வெசாக் கூடுகள் மற்றும் கண்கவர் தோரணங்கள் போன்ற கலாசார அலங்காரங்களும் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன.
“அனைத்து இனங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.
அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது அன்றாட வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இத்தினம் அமையட்டும்” என ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
