Main Menu

ஈரான்-அமெரிக்கா மோதல் : அமைதி காக்குமாறு பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் வேண்டுகோள்

ஈரானியத் தளபதி காசிம் சோலெய்மனியை (Qasem Soleimani) அமெரிக்கா படுகொலை செய்ததையடுத்து அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டைப் பேணவேண்டும் என்ற கோரிக்கையில் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பியத் தலைவர்களுடன் இணைந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவில் நடத்தப்பட்ட வான்வழி ஏவுகணைத் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பக்தாத் விமான நிலையத்தில், உள்ளூர் ஈரான் ஆதரவுப் போராளிகளுடன் சேர்ந்து சோலெய்மனி கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையடுத்து பதற்றநிலை மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக இரு தரப்பினரும் கட்டுப்பட்டைப் பேணவேண்டுமென பிரதமர் ஜோன்சன், ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டு அறிக்கையில் தற்போதைய வன்முறை சுழற்சி நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக வன்முறை நடவடிக்கைகளை ஈரான் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானால் ஐரோப்பா மற்றும் பிரித்தானியா எதிர்நோக்கிய அச்சுறுத்தல்கள் குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் ஆனால் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் இப்போது கடைப்பிடிக்கவேண்டும் எனவும் மூன்று தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

பகிரவும்...